Skip to main content

சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிச்சாமி...!

Published on 09/01/2020 | Edited on 09/01/2020

தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் சார்பில் நடத்தப்படும் 43ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. 

 

cm edappadi-palanisamy-inaugurated-book-fair-in-chennai

 

 

700க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, சுமார் இரண்டு கோடி புத்தகங்கள் இடம் பெற்றுள்ள இந்த புத்தக கண்காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இதில் முதல்வருடன் அமைச்சர் பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், அமைச்சர் டி. ஜெயகுமார், அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர். 

 

cm edappadi-palanisamy-inaugurated-book-fair-in-chennai

 

 

இந்த கண்காட்சி ஜனவரி 9ஆம் தேதி தொடங்கி ஜனவரி 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கீழடி அகழாய்வு என்ற தலைப்பில் 3 ஆயிரம் சதுரஅடியில் பிரம்மாண்டமான அரங்கம் மாநில தொல்லியல் துறை ஒத்துழைப்போடு அமைக்கப்பட்டுள்ளது, இந்த கண்காட்சியின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

சார்ந்த செய்திகள்

Next Story

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.