Skip to main content

புதிய அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி குறித்து அறிவித்த முதல்வர்!

Published on 22/09/2020 | Edited on 22/09/2020

 

CM Edappadi palanisami announced new medical college and hospital in ramanathapuram
கோப்பு படம்

 

 

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்துவதற்காக இராமநாதபுரம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு நலத்திட்டப்பணிகளை வழங்கி, திட்டப்பணிகளுக்காக அடிக்கல்லும் நாட்டினார். அப்போது அவர், விரைவில் இராமநாதபுரத்தில் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி அமையவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

முன்னரே திட்டமிட்டப்படி கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்துவதற்காக இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு முதலில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் சார்பில் பூங்கொத்து கொடுத்து வரவேற்கப்பட்ட நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் ரூ.70,54,88,000 மதிப்பில் 220 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய நிலையில், ரூ.24,24,68,000 மதிப்பில் முடிவுற்ற 844 திட்ட பணிகளை திறந்து வைத்தார். தொடர்ச்சியாக பல்வேறு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் கடந்த ஜூன் மாதத்தில் இந்திய, சீன லடாக் எல்லையில் இரு நாட்டு வீரர்கள் இடையே நடந்த தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் பழனி மனைவி வானதி தேவிக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணி ஆணை வழங்கினார்.

 

அதன் பின்னர் பேசிய முதலமைச்சர் " குடிமராமத்து திட்டம் மூலம் விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. ரூ.48 கோடி மதிப்பீட்டில் 308 குடிமராமத்து பணி மேற்கொள்ளப்பட்டு பருவகால மழைநீர் வீணாகாமல் சேமிக்கப்படுகிறது." என்றவர் தொடர்ந்து, "இராமநாதபுரத்தில் அரசு மருத்துவமனை  மருத்துவக்கல்லூரி" அமையவுள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் மாவட்ட மக்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவிவருவது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''குசும்ப பாருங்க... வாட்ஸ் அப்பில் இப்படியெல்லாம் பரப்புகிறார்கள்''-ஓபிஎஸ் ஆதங்கம்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
They are spreading all this on WhatsApp" - OPS

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் பரப்புரையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய சின்னத்தை திராட்சை கொத்து என பலர் வாட்ஸ் அப்பில் தவறாக பரப்புவதாக குற்றச்சாட்டையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ராமநாதபுரத்தில் திறந்தவெளி வேனில் பிரச்சாரம் மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ''நான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுபவர்கள் மூன்று சின்னங்களைக் குறிப்பிட வேண்டும். நான் மூன்று சின்னங்களைக் குறிப்பிட்டு கொடுத்திருந்தேன். இப்பொழுது நிறைய பன்னீர்செல்வங்கள் வந்து விட்டார்கள். என்னுடன் சேர்த்து ஆறு பன்னீர்செல்வம். மற்ற ஐந்து பேரும் நான் என்னென்ன சின்னம் எழுதிக் கொடுத்தேனோ அதே சின்னத்தை எழுதி கொடுத்திருக்கிறார்கள். ஒரு குழப்ப சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று அப்படி செய்துள்ளார்கள். இப்பொழுது என்ன செய்திருக்கிறார்கள் என்றால், குசும்பு பாருங்க, ஓபிஎஸ் சின்னம் வாளி என வாட்ஸ் அப்பில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓபிஎஸ் சின்னம் திராட்சை கொத்து என வாட்ஸ் அப்பில் பரப்புகிறார்கள்.

நான் எழுதிக் கொடுத்த மூன்று சின்னங்களையும் ஓபிஎஸ் சின்னம் ஓபிஎஸ் சின்னம் என்று செல்லில் இன்று பறக்கவிட்டு வருகிறார்கள். இது எவ்வளவு கீழ்த்தரமான அரசியல். ஒரு சின்னத்தை இரண்டு வேட்பாளர்கள் கேட்டால் குலுக்கள் முறையில் கொடுப்பார்கள். சின்னம் ஒதுக்குவது குறித்து நேரம் காலம் ஒதுக்கப்பட்டது. உங்களுடைய வாழ்த்துக்களால், ஆசிர்வாதத்தால் நீங்கள் தந்த வரத்தினால் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் சின்னம் கிடைத்துள்ளது. அது உங்களால் தான் கிடைத்தது. உங்கள் ஆசியால் எனக்கு இந்தச் சின்னம் கிடைத்தது''என்றார்.

Next Story

தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Ban for tourists to go to Dhanushkodi

தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதித்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் தனுஷ்கோடி பகுதியில் நேற்று (31.03.2024) மாலை 6 மணியளவில் தனுஷ்கோடி 3வது சட்டம் முதல் அரிச்சல்முனை வரை உள்ள தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் 6 மீட்டர் முதல் 10 மீட்டர் வரை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ராட்சத அலைகளும் எழுந்துள்ளன.

இதன் காரணமாக தேவலயாம், சாலையோரங்களில் உள்ள கடைகளிலும் கடல் நீர் உட்புகுந்தன. கடல் ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான மதிப்பிலான மீன் பிடி வலைகள் மணலில் புதைந்து சேதமடைந்துள்ளன. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடியில் தற்போது சூறைக்காற்றுடன் 5 அடி உயரம் வரை கடல் அலைகள் எழுவதால் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி கடலுக்குச் செல்ல தடை விதித்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.