Skip to main content

“கல்லாக்கோட்டை மது ஆலையை மூடுக!” பத்தாயிரம் மக்கள் கையெழுத்திட்ட மனுக்கள் தமிழ்நாடு அரசிடம் நேரில் கையளிப்பு!

Published on 22/08/2019 | Edited on 22/08/2019

புதுக்கோட்டை மாவட்டம் – கல்லாக்கோட்டையில் கால்ஸ் மது ஆலையை மூடக் கோரி தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மகளிர் ஆயமும், நாம் தமிழர் கட்சியும் திரட்டிய பத்தாயிரம் மக்கள் கையெழுத்திட்ட மனுக்கள் இன்று (22.08.2019)  தமிழ்நாடு அரசிடம் கையளிக்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம் - கந்தர்வக்கோட்டை வட்டம் - கல்லாக்கோட்டையில் செயல்பட்டு வரும் கால்ஸ் மது உற்பத்தி ஆலை, கடந்த 2008ஆம் ஆண்டு வாக்கில் திறக்கப்பட்ட பின் கல்லாக்கோட்டையைச் சுற்றியுள்ள 20 கிராமங்களில் நிலத்தடி நீர் வற்றிப் போய் வேளாண்மை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்று வட்ட கிராமங்களின் மக்கள் போதிய குடிநீரின்றித் தவிக்கிறார்கள்.

 

Close the wine factory... thousands of people sign petitions to the Government of Tamil Nadu!

 

ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை ஆழ்குழாய்க் கிணறுகள் வழியாகக் கால்ஸ் நிறுவனம் உறிஞ்சுகிறது. அந்த சாராய ஆலைக்கு அருகில் 600 ஏக்கரில் இயங்கி வந்த தமிழ்நாடு அரசு வேளாண் விதைப்பண்ணை தண்ணீரில்லாமல் மூடப்பட்டு விட்டது.

கால்ஸ் ஆலை தொடங்கப்பட்டால் இவ்வாறான பாதிப்புகள் வரும் என்று கடந்த 2008இல் சனநாயக வழியில் போராடிய சுற்று வட்ட மக்கள் மீதும் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மீதும் ஏராளமான வழக்குகளைப் போட்டு, சிறையிலடைத்து அப்போதைய தி.மு.க. ஆட்சியாளர்கள் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டார்கள். ஒருவர் மீது நான்கு, ஐந்து வழக்குகள் போட்டுள்ளார்கள். இன்னும் அந்த வழக்குகளுக்காக அவர்கள் நீதிமன்றம் அலைந்து கொண்டுள்ளார்கள்.

இந்நிலையில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மகளிர் அமைப்பான “மகளிர் ஆயம்” தலைமையில் கடந்த 14.05.2019 அன்று கல்லாக்கோட்டை கால்ஸ் மது ஆலையை மூட வலியுறுத்தி அவ்வாலை முன்பு மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்று இருநூறுக்கும் மேற்பட்ட பெண்களும் சுற்று வட்ட மக்களும் பங்கேற்று கைதாகினர். 

அதன்பிறகு, நாம் தமிழர் கட்சியினரும், மகளிர் ஆயத்தினரும் இணைந்து கடந்த 28.06.2019லிருந்து 05.07.2019 வரை கந்தர்வகோட்டை சுற்று வட்டாரப் பகுதியில் மக்களிடம் இக்கோரிக்கைகளுக்காக பத்தாயிரம் கையெழுத்துகள் வாங்கினர். இக்கையெழுத்துகள் கொண்ட மனு இன்று 22.08.2019 சென்னை தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. 

 

Close the wine factory... thousands of people sign petitions to the Government of Tamil Nadu!

 

இம்மனுவை, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன், மகளிர் ஆயம் தலைவர் தோழர் ம. இலட்சுமி அம்மாள், நாம் தமிழர் கட்சி கந்தர்வக்கோட்டை செயலாளர்  செல்வக்குமார், புதுக்கோட்டை நடுவண் செயலாளர்  முருகானந்தம், தமிழுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் புலவர் இரத்தினவேலன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, மகளிர் ஆயம் செயற்குழு தோழர் பிருந்தா, தோழர்கள் கோ. செந்தாமரை, த. சத்தியா ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்து அளித்தனர். 

முன்னதாக, தமிழ்நாடு அரசு உள்துறை செயலாளர் திரு. நிரஞ்சன் மார்டி இ.ஆ.ப., அவர்களை நேரில் சந்தித்துப் பேசிய பெ. மணியரசன் தலைமையிலான தோழர்கள், 2008இல் மது ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளைக் கைவிட வேண்டுமெனக் கோரினர். அதன்பின், தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி திரு. டி. பாஸ்கரபாண்டிய் இ.ஆ.ப.,நேரில் சந்தித்து பத்தாயிரம் மக்கள் கையெழுத்துகள் வழங்கப்பட்டன.

அதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்த  மணியரசன், “கல்லாக்கோட்டையிலுள்ள கால்ஸ் மது உற்பத்தி ஆலை நிலத்தடி நீரை உறிஞ்சிவிட்டதால், சுற்றுவட்டத்தில் 20 கிராமங்கள் நிலத்தடி நீர் வற்றி வேளாண்மை முற்றிலும் பாதிக்கப்பட்டுவிட்டது. குடிநீரும் இல்லை. எனவே, கால்ஸ் மது ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். இவ்வாலையைத் தொடங்கக் கூடாது என்று 2008இல் போராடிய மக்கள் மீது போட்டுள்ள அனைத்து வழக்குகளையும் கைவிட வேண்டும்.  கல்லாக்கோட்டையில் நிலத்தடி நீரின்றி மூடப்பட்டுள்ள அரசு வேளாண் விதைப் பண்ணையை மீண்டும் செயல்படுத்த வேண்டும். கால்ஸ் மது ஆலையில் வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு மாற்று வேலை வழங்க வேண்டும்” ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினார். 

 

சார்ந்த செய்திகள்

 
The website encountered an unexpected error. Please try again later.