
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளகுன்னூர் பகுதியில் வசித்து வருபவர், முதியவரானநாகராஜ்.தேனி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஜவுளிக் கடையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி வழக்கம்போல கடையின் வரவு செலவிற்காக தேனி பெரியகுளம் சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கிக்கு சென்றுள்ளார். வங்கியில் அதிக அளவு கூட்டம் இருந்ததால், வெளியே இருந்த பணம் செலுத்தும் ஏடிஎம் மையத்திற்குச் சென்றுள்ளார்.அப்போது அங்கிருந்த இளம்பெண் ஒருவர்,பணம் செலுத்துவதற்கு தான் உதவி செய்வதாக நாகராஜிடம் கூறி, ரசீது வராத இயந்திரத்தில் ரூபாய் 50 ஆயிரம் பணத்தைப் போட்டுள்ளார். அதில் ஒரு 500 ரூபாய் தாளை மட்டும் இயந்திரம் எடுத்துக் கொள்ளாததால் மீதமிருந்த ரூபாய் 49,500 மட்டும் கணக்கில் செலுத்தப்பட்டதாக அந்த இளம்பெண் நாகராஜிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து ஐநூறு ரூபாயை பெற்றுக்கொண்டு வந்த நாகராஜ், ஜவுளிக்கடை நிறுவனத்தின் வங்கிக் கணக்கை சரி பார்க்கையில் ஏடிஎம் இயந்திரத்தில் செலுத்தப்பட்ட தொகை வரவு ஆகாமல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து வங்கி நிர்வாகத்திடம் கேட்கையில், சம்பவத்தன்று பணம் ஏதும் ஏடிஎம் இயந்திரத்தின் வாயிலாக பெறப்படவில்லை என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மேலாளர் நாகராஜ், தேனி நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்றது. இதில் வங்கியின் ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், நாகராஜ் கொடுத்தப் பணத்தை இயந்திரத்தில் செலுத்துவது போல நடித்து, அவர் சென்றதும் பணத்தை இளம்பெண் எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

அதன் அடிப்படையில் விசாரணையை துரிதப்படுத்திய காவல்துறையினர், ஆண்டிபட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணன் என்பவரின் மனைவி மணிமேகலை (23) மோசடி சம்பவத்தில் ஈடுபட்டதைக் கண்டுபிடித்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், மோசடி செய்ததை இளம்பெண் மணிமேகலை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் அவரிடம் இருந்து பணம் ரூபாய் 49,500 கைப்பற்றப்பட்டது. கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து குழந்தையுடன் தனியே வசித்து வரும் மணிமேகலை இளங்கலை கணினி அறிவியல் பட்டதாரி ஆவார்.
இதேபோன்று விருதுநகர் மற்றும் உசிலம்பட்டி பகுதியில் உள்ள ஏடிஎம் மையங்களில் பணம் செலுத்துபவர்களுக்கு உதவுவது போல நடித்து மோசடி செய்ததாக காவல்துறையினரால் மணிமேகலை கைது செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. மேலும் தற்போது போடி பகுதியில் இருந்தும் சிலர் இதுபோன்று தாங்கள் ஏமாற்றப்பட்டதாக தேனி காவல்நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், வழக்குப் பதிந்து மணிமேகலையை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். ஏடிஎம் மையத்தில் பணம் செலுத்த வருபவர்களிடம் உதவி செய்வதாகக் கூறி இளம்பெண் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)