Skip to main content

கல்விக்கு ஏங்கும் குழந்தைகள்.. அதிகாரிகளை அழைத்துச் சென்ற பத்திரிக்கையாளர்கள்...

Published on 30/01/2022 | Edited on 30/01/2022

 

kl;


பல தலைமுறையாக கல்வியை கனவில் கூட பார்க்காத ஒரு குக்கிராமம் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். உடல் உழைப்பு, தினக்கூலி, நீர்நிலையோரம் தங்கல், இது தான் அவர்களின் வாழ்க்கை. இப்படியான ஒரு கிராமமான புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் எல்.என்.புரம் ஊராட்சியில் உள்ள சுக்கிரன்குண்டு கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க வேண்டும் என்பதே நமது எண்ணமாக இருந்தது.

 

இந்த நமது எண்ணத்தை சாத்தியமாக்கும் காலமாக இல்லம் தேடி கல்வி இருப்பதை உணர்ந்த நாம் சக பத்திரிக்கை நண்பர் சுரேஷ் ஆகியோர் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, திருவரங்குளம் வட்டாரக்கல்வி அலுவலர் கருணாகரன், பள்ளி மேலாண்மைக்குழு வழிகாட்டு தலைமை ஆசிரியர் கருபபையன், இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி ஆகியோர் பார்வைக்கு முன்வைத்தோம். முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவில்  வட்டாரக் கல்வி அலுவலர் தலைமையில் அதிகாரிகள் குழு முதல்கட்டமாக சில நாட்களுக்கு முன்பு நாம் குறிப்பிட்ட கிராமத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். பள்ளிப் பருவ குழந்தைகள் 34 பேர் இருப்பதை கண்டறிந்தனர். உடனே அவர்களிடமும், அவர்களது பெற்றோர்களிடமும் நீண்ட நேரம் உரையாடிய பிறகு உடனே இல்லம் தேடிக் கல்வி மையம் திறப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்தது. அந்த கிராமத்தில் உள்ள ரேவதி என்ற பெண் மட்டுமே தனது மகள் பவானி மற்றும் ஒரு மகனை கல்லூரி வரை அனுப்பி இருக்கிறார் என்பது மகிழ்வாக இருந்தது. மற்ற குழந்தைகளின் பெயர்கள் அருகாமைப் பள்ளிகளில் உள்ளது. 

 

ஆனால் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் தான் வேலை செய்யும் இடங்களுக்கு அழைத்துச் சென்று விடுகிறார்கள் என்பது தெரிய வந்தது. மேலும் சத்தான உணவுகள் கிடைக்காமல் சத்து குறைபாடுகளுடன் சுத்தமின்றி குழந்தைகள் இருந்தனர். அவர்களிடம் பேசிய பிறகு குழந்தைகளை படிக்க அனுப்ப சம்மதித்தனர். இந்த தகவல் முதன்மைக்கல்வி அலுவலருக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் அவரும் ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று உண்டு உறைவிடப் பள்ளிக்கான ஏற்பாடுகள் செய்வதாக கூறினார். எஸ்.டி.பசீர்அலி உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் உதவிகள் செய்ய முன்வந்துள்ளனர். செரியலூர் பள்ளி ஆசிரியர் அன்பரசன் மற்றும் காசிம்புதுப்பேட்டை பள்ளி ஆசிரியர்கள், புளிச்சங்காடு பள்ளி ஆசிரியர்களும் தன்னார்வலர்களாக மாறி கல்வி கற்பிக்க தயாராகி உள்ளனர். சில மாதங்களில் சராசரியான கிராமமாக சுக்கிரன்குண்டும் பஞமாறும் என்ற மகிழ்வோடு காத்திருக்கிறோம். பள்ளி செல்லா குழந்தைகள் அதிகமுள்ள பகுதிகளை தேர்வு செய்து இல்லம் தேடிக் கல்வி மையம் திறந்து பயிற்சி அளிக்கும் போது பயிற்சி காலம் முடியும் போது அந்த குழந்தைகளும் பள்ளிக்குச் செல்வார்கள். 

 

சார்ந்த செய்திகள்