Skip to main content

சிலம்பாட்டப் போட்டி! வென்றவர்களுக்கு பரிசளிப்பு!   

Published on 07/01/2021 | Edited on 07/01/2021

  

chilambattam competition Prizes for the winners in thiruvannamalai district


தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் திருவண்ணாமலை மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் சேத்துப்பட்டு திவ்யா கல்விக்குழும வளாகத்தில் நடைபெற்றது.  

 

திருவண்ணாமலை முன்னாள் மாவட்ட ஆட்சித் தலைவரும் தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக மாநிலத் தலைவருமான டாக்டர் மு.ராஜேந்திரன், ஐ.ஏ.எஸ். தலைமையின் கீழ் செயல்படும், சிலம்பாட்டக் கழகத்தின் மாவட்ட அளவிலான போட்டிகள் அண்மையில் நடந்தது. அதில் வென்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா நடந்தது. இவ்விழாவிற்கு, திருவண்ணாமலை மாவட்ட சிலம்பாட்டக் கழகத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் தலைமையேற்றார். மாவட்டச் செயலாளர் பெ.பெரியசாமி வரவேற்புரை ஆற்றினார்.

 

இந்த மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் சேத்துப்பட்டு, வந்தவாசி, ஆரணி, பெரணமல்லூர், தண்டராம்பட்டு, போளூர் ஆகிய ஊர்களிலிருந்து சிலம்பாட்ட வீரர்கள் பங்கேற்றனர். போட்டியின் நடுவர்களாக விழுப்புரம் மாவட்ட சிலம்பாட்டக் கழகச் செயலாளர் க.குணசேகரன், உடற்கல்வி ஆசிரியர் மகேஸ்வரி ஆகியோர் இருந்தனர். சப்-ஜூனியர் பிரிவில் ஆரணி கோட்டைச் சிலம்பக் குழுவின் ஜெயரேவன், பெரணமல்லூர் புத்தாஸ் சிலம்பக் குழுவின் பிரவீன் ஆகியோர் முதலிடத்தையும், ஜூனியர் பிரிவில் ஆவணியாபுரம் புத்தாஸ் சிலம்பக் குழுவின் முரசொலி முதலிடத்தையும், சீனியர் பிரிவில் வந்தவாசி அகிலாண்டேஸ்வரி கல்லூரி மாணவி விஷ்ணுப்ரியா, சேத்துப்பட்டு புத்தாஸ் சிலம்பக் குழுவின் இ.காமேஷ் ஆகியோர் முதலிடத்தையும், சூப்பர் சீனியர் பிரிவில் தண்டராம்பட்டு முனியப்பன், சேத்துப்பட்டு பூபாலன் ஆகியோர் முதலிடத்தையும் பிடித்தனர்.

 

போட்டிகளில் வென்றவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கா.முத்துவேல் பரிசுகளை வழங்கினார். இந்தப் போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றிபெற்ற சிலம்பாட்ட வீரர்கள், வரும் ஜனவரி இறுதி வாரத்தில் சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டிகளில் பங்கேற்கவிருக்கிறார்கள். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ந.பார்த்திபன், கவி.விஜய், ச.சத்தீஷ், இரா.பாலாஜி. ச.சந்தோஷ், ஏ.காமேஷ், மு.பாலாஜி, ச.சரண்யா ஆகியோர் செய்திருந்தனர். 

 

பல்வேறு பாரம்பரிய விளையாட்டுக்களை அழித்துவரும் இந்த ஆண்ட்ராய்ட் சூறாவளிக்கு நடுவிலும், பழந்தமிழரின் தற்காப்புக் கலைகளில் ஒன்றான சிலம்பக் கலையை முன்னெடுத்து, அதை வளர்க்கப் பாடுபட்டுவரும் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள் ஆவார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் பங்க் மேலாளர் மீது தாக்குதல்; திருவண்ணாமலையில் பரபரப்பு

Published on 25/12/2023 | Edited on 25/12/2023
incident for petrol station manager in Tiruvannamalai

திருவண்ணாமலை வேலூர் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது திருச்செந்தூர் பெட்ரோல் பங்க். இந்த பெட்ரோல் பங்கில் நேற்று மாலை  (24.12.2023) இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு இளைஞர்கள் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு பணத்தை இவர் கொடுப்பார் அவர் கொடுப்பார் என மாறி மாறி கூறியதையடுத்து பெட்ரோல் பங்க் ஊழியருக்கும் அந்த இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் பெட்ரோல் பங்கில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதை அறிந்த மேலாளர் தனது அறையில் இருந்து வெளியே வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் மேலாளரை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பித்ததாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து 30 நிமிடங்கள் கழித்து மீண்டும் தனது நண்பர்களுடன் பெட்ரோல் பங்குக்கு கையில் அரிவாளுடன் வந்த இளைஞர்கள் மேலாளர் ரகுராமனை அறிவாளால் சரமாரியாக தாக்கியதில் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு கொடுத்த தகவலினல் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீஸார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அறிவாளால் வெட்டி விட்டு தப்பித்துச் சென்ற இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெட்ரோல் போட்டு விட்டு பணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறு இளைஞர்கள் பெட்ரோல் பங்க் மேலாளரை அறிவாளால் சரமாரியாக கொலைவெறி தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து இன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை நகரத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குகளும் இந்த சம்பவத்தை கண்டித்து ஸ்ட்ரைக்கில் ஈடுப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல், டீசல் போடமுடியாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். 

Next Story

பட்டப் பகலில் ஓட ஓட விரட்டி ரவுடி படுகொலை; 6 பேர் நீதிமன்றத்தில் சரண்

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
chennai corporation office near premkumar incident 6 people surrendered in court

சென்னை வால்டாக்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (40). இவர் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட சேட்டு என்பவரது கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக பிரேம்குமார் கைது செய்யப்பட்டார். மேலும், யானைக்கவுனி காவல் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் இவரது பெயர் இருக்கிறது. சேட்டு கொலை வழக்கில் பிரேம்குமார் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.

இந்த நிலையில், சேட்டு கொலை வழக்குக்காக பிரேம்குமார் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள அல்லிக்குளம் நீதிமன்றத்திற்கு நேற்று (19-12-23) வந்து ஆஜரானார். அதன் பின்னர், அங்கிருந்த தனது உறவினர்களான நரேஷ், வசந்த் ஆகியோருடன் ரிப்பன் மாளிகை எதிரே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், பிரேம்குமாரை சுற்றி வளைத்து தாங்கள் கொண்டு வந்திருந்த பட்டாக்கத்தியால் ஓட ஓட சரமாரியாக வெட்டினர். இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற நரேஷ் மற்றும் வசந்துக்கும் வெட்டு விழுந்தது. அதில், பிரேம்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரேம்குமாரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரேம்குமாரின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயமடைந்த நரேஷ் மற்றும் வசந்த் ஆகியோர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து, இந்த கொலை சம்பவம் தொடர்பாக பெரியமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். சேட்டு கொலைக்கு பழிக்கு பழி வாங்க பிரேம்குமார் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவரைக் கொலை செய்த குற்றவாளிகள் அடையாளம் தெரிந்துள்ளதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

பட்டப் பகலில் 6 பேர் கொண்ட கும்பல் கொலை செய்து தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட துரை, சஞ்சய் உள்ளிட்ட 6 பேர் திருவண்ணாமலையில் தலைமறைவாக இருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிவசங்கர், சாந்தகுமார், நாராயணன், சரவணன், குமார் மற்றும் மணிகண்டன் ஆகிய 6 பேர் பொன்னேரி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.