Skip to main content

முதலமைச்சரின் காவல் பதக்கம்; தமிழக அரசு அறிவிப்பு 

Published on 13/08/2023 | Edited on 13/08/2023

 

Chief Minister's Police Medal' for Police Officers Tamil Nadu Government Notification

 

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் 9 ஆம் தேதி  சட்டப் பேரவையில் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கையின் போது சமூகத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்காகக் கடுமையாகவும், உண்மையாகவும் உழைக்கும் அதிகாரிகள், காவலர்களை ஊக்குவிப்பதற்கென மாண்புமிகு முதலமைச்சரின் பதக்கம் புதிதாக வழங்கப்படும் என அறிவித்தார். அதனைத் தொடர்ந்து காவல்துறை தலைமை இயக்குநரின் பரிந்துரையின் பெயரில் காவல் அதிகாரிகளுக்கு மாண்புமிகு முதலமைச்சரின் பதக்கம் வழங்கப்படுகிறது.

 

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான மாண்புமிகு முதலமைச்சரின் பதக்கம் குறித்த அறிவிப்பு சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி கடந்த ஜூன் 26 ஆம் தேதி காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.

 

அதன்படி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ. பத்ரி நாராயணனுக்கும், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷுக்கும், சேலம் உட்கோட்ட இருப்புப் பாதை காவல் துணை கண்காணிப்பாளர் மா. குணசேகரனுக்கும், நாமக்கல் மாவட்ட காவல் உதவி ஆய்வாளர் சு. முருகனுக்கும், நாமக்கல் மாவட்டத்தில் முதல் நிலை காவலராகப் பணியாற்றும் இரா. குமாருக்கும் மாண்புமிகு முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன.

 

மேலும் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோதக் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக செயல்பட்ட முன்னாள்  மதுரை தென் மண்டலக் காவல்துறைத் தலைவரும், தற்போது சென்னை வடக்கு கூடுதல் ஆணையராகப் பணியாற்றி வரும் அஸ்ரா கர்க் பணியை அங்கீகரித்து ரொக்கப் பரிசு இல்லாமல் சிறப்பு பதக்கம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த விருது மற்றும் பதக்கங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை மறுநாள் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் காவலர்களுக்கு வழங்க உள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் சம்பந்தமாக அதிரடி சோதனை

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
raid in Kalvarayan hill related to illicit liquor

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராய சம்பவத்தில் 67 பேர் உயிர் இழந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தின் பிறப்பிடம் எனக் கூறப்படும் கல்வராயன் மலையில் ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் ஐ.ஜி அஸ்ராகார்க் கள்ளக்குறிச்சி எஸ்பி ரஜத் சதுர்வேதி ஆகியோர் 200 க்கும் மேற்பட்ட போலீசாருடன் கல்வராயன் மலையில் அதிரடியாக கள்ளச்சாராய சோதனையில் ஈடுபட்டனர். 

இந்தச் சோதனையின் போது ஏற்கனவே கள்ளச்சாராய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் பெயர் பட்டியலை வைத்துக் கொண்டு அவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்கள் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்களா? கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கான மூலப் பொருட்கள் அவர்களுடைய வீட்டில் இருக்கிறதா என்ற சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அடர்ந்த வனப்பகுதி உள்ள இடங்களில் ட்ரோன் கேமராக்களை பறக்கவிட்டு சோதனைகளை செய்துள்ளனர். கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சும்பணி ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், காவல்துறை அதிகாரிகளின் இன்றைய சோதனையில் எதுவும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேற்கொண்டு கல்வராயன் மலையில் மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சும் சம்பவம் தொடர்ந்து விடக்கூடாது எனக் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

சின்னசேலம் பகுதி வழியாக கல்வராயன் மலை கரியாலூர் வெள்ளிமலை போன்ற பகுதிகளுக்கு சென்ற இவர்கள் அதனைத் தொடர்ந்து அங்கிருந்து சேராப்பட்டு என்ற மலைப் பகுதிக்கு சென்று அந்தப் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்ட பின்னர். சோதனை முடிந்த பிறகு மலையிலிருந்து கீழே இறங்கி சங்கராபுரம் வட்டம் வழியாக வெளியேறிச் சென்றுள்ளனர்.

Next Story

மதுரையை உலுக்கிய சம்பவம்; ஐ.ஏ.எஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி தற்கொலை!

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
Ex-wife of IAS officer lost their life in case of child abduction

மதுரையைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார் - மைதிலி தம்பதியினர். இவர்களது மகன் மதுரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். அவர், பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 11 ஆம் தேதி பள்ளிக்கு ஆட்டோவில் சென்றுக்கொண்டிருந்த போது சிறுவன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் பால்பாண்டி இருவரையும் மர்ம கும்பல் ஒன்று ஆயுதங்கள் கொண்டு தாக்கி கடத்தி சென்றது. 

இதனையடுத்து அந்தக் கும்பலை சேர்ந்தவர்கள் ராஜ்குமார் மைதிலி தம்பதியினரை தொடர்புக்கொண்டு, ரூ.2 கோடி பணம் கொடுத்தால் உன் மகனை உயிருடன் ஒப்படைப்பதாக மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மைதிலி உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவன் மற்றும் ஆட்டோ ஓட்டுநரையும் பத்திரமாக மீட்டனர். மேலும் சிறுவனை கடத்தியது தொடர்பாக முன்னாள் காவலர் செந்தில் குமார் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். செந்தில் குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் அவர் உயர் அதிகாரிகளால் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

செந்தில் குமார் போலீசாரிடம் அளித்த தகவலின்படி தென்காசியைச் சேர்ந்த வீரமணி, காளிராஜ், நெல்லையைச் சேர்ந்த அப்துல் காதர் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில், சிறுவன் கடத்தப்பட்டதில் தூத்துகுடியைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி சூர்யா மற்றும் பிரபல ரௌடி மகாராஜா ஆகிய இரண்டு பேருக்கும் தொடர்பு இருப்பதைக் கண்டுப்பிடித்தனர். 

இதனைத் தொடர்ந்து வழக்கின் முக்கிய குற்றவாளியான சூர்யா மற்றும் மகாராஜா இருவரையும் பிடிக்க 4 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் குஜராத்தில் தங்கிருந்த சூர்யா தற்கொலை செய்துக்கொண்டதாக  தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து சூர்யாவின் தாய் தனது மகள் குஜராத்தில் தற்கொலை செய்துகொண்டதை உறுதி செய்யுமாறும், மேலும் தனது மகளை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனிடையே, தலைமறைவாக உள்ள ரௌடி மகாராஜா பிடிபடாத நிலையில் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மதுரையை உலுக்கிய இந்தச் சமபவத்தில் முக்கிய குற்றவாளி சூர்யா தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.