Skip to main content

முதல்வர் உத்தரவு; மௌனம் காக்கும் கமிட்டி; மன உளைச்சலில் மாநகர போலீசார்!

Published on 25/03/2023 | Edited on 25/03/2023

 

Chief Minister's order.. Committee to keep silence..  police in distress..!

 

சென்னை மாநகர காவல் ஆணையரகம் கட்டுப்பாட்டின் கீழ் 155 காவல் நிலையங்கள் இயங்கி வந்தன. சென்னை பெருநகரின் வளர்ச்சியின் காரணமாக, சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் , காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் தொழில் புரட்சியின் காரணமாக, குடியிருப்புகள் அதிகரித்துக் கொண்டே உள்ளன. இதனால் சென்னை மாநகர காவல்துறைக்கு பணிச் சுமை மிகவும் அதிகமாக இருந்து வந்தது. 

 

இது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதற்கான தீர்வாக கடந்த 13 ஆம் தேதி செப்டம்பர் 2021 அன்று சட்டமன்ற கூட்டத்தில் காவல்துறை மானிய கோரிக்கையின் போது, சென்னை புறநகர் பகுதியில் சட்டம் ஒழுங்கை சீர்படுத்தும் வகையில், தாம்பரம் மற்றும் ஆவடி என இரண்டு காவல்துறை ஆணையரகம் புதிதாக துவங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி அறிவித்த மூன்றே மாதங்களில் அதை நடைமுறைப்படுத்தும் வகையில், 2022 ஜனவரி 1 ஆம் தேதி,  20 காவல் நிலையங்களை கொண்ட தாம்பரம் ஆணையரகம் அமைத்து முதல் கமிஷ்னராக கூடுதல் டி.ஜி.பி. ரவி ஐ.பி.எஸ்ஸை நியமித்தார். மேலும் 25 காவல் நிலையங்களை உள்ளடக்கிய ஆவடி காவல் ஆணையரகம் அமைத்து அதன் கமிஷ்னராக கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் ரத்தோர்ராய் ஐ.பி.எஸ்ஸை நியமித்தார். 

 

தற்போது சென்னை மாநகர காவல் ஆணையரகத்தின் கீழ் 103 காவல் நிலையங்கள் உள்ளடக்கி செயல்பட்டு வருகின்றன. இந்த மூன்று மாநகர காவல் எல்லையில் பணி செய்து வந்த உதவி ஆய்வாளர்கள் முதல் காவலர் வரை பல்வேறு காரணங்களுக்காக பணியிட மாற்றம் கேட்டிருந்தனர். 

 

Chief Minister's order.. Committee to keep silence..  police in distress..!

 

இந்த நிலையில் அவர்கள் கோரிக்கையை ஏற்று முதல்வர் மு.க. ஸ்டாலினின் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கமிஷ்னர் ஐ.ஜி லோகநாதன் ஐ.பி.எஸ். உள்ளடக்கிய மூன்று பேர் சேர்ந்த கமிட்டி அமைக்கப்பட்டது. ஆனால் அந்த கமிட்டி அமைக்கப்பட்டதிலிருந்து இதுவரை 500க்கும் மேற்பட்ட போலீசார் பணியிடம் மாற்றம் கேட்டிருந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வருகிறது.  இந்த மூன்று மாநகர காவல் எல்லை பிரிக்கும்போது 500க்கும் மேற்பட்ட போலீசார் பல்வேறு காரணங்களுக்காக பணியிட மாற்றம் கேட்டு மனு செய்திருந்தனர்.  

 

ஆனால், இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி செயல்படாமலே இருந்து வருகிறது.  இதனால் பணியிட மாறுதல் கேட்டிருந்த போலீசார் மன அழுத்தத்தில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையைச் சேர்ந்த சில போலீசார், இந்த பணியிட மாற்றம் தொடர்பாக அமைக்கப்பட்ட கமிட்டி பற்றி முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

 

Chief Minister's order.. Committee to keep silence..  police in distress..!

 

அதன்படி கடந்த டிசம்பர் மாதம் இது தொடர்பாக சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியதில் குறைதீர்ப்பு முகாம் அமைத்து மனுக்கள் பெறப்பட்டது. இருந்தபோதிலும் இதுவரை பணியிட மாற்றம் கேட்ட போலீசாருக்கு எந்த பணியிட மாற்றமும் செய்யப்படவில்லை. 


இது தொடர்பாக இந்த கமிட்டி தலைவரான சென்னை மாநகர காவல் தலைமையக  கூடுதல் போலீஸ் கமிஷ்னரான ஐ.ஜி.  லோகநாதன் ஐ.பி.எஸ்.-ஐ ஃபோனில் தொடர்பு கொண்டோம். அவர் தொடர்பை எடுக்கவில்லை. தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபுவையும் தொடர்பு கொண்டோம் அவரும் பதில் அளிக்கவில்லை. இது தொடர்பாக குறுஞ்செய்தி அனுப்பியும் பதில் தரவில்லை. 


ஐ.ஜி.லோகநாதன் மற்றும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோர் இதுகுறித்து பதில் தரும் பட்சத்தில் அதுவும் பதிவேற்றப்படும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரிசையில் நின்று வாக்கினை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Chief Minister Stalin stood in line and cast his vote!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வந்த முதல்வர் ஸ்டாலின் வரிசையில் காத்திருந்து தனது ஜனநாயக கடமையாற்றினார். அவரைத் தொடர்ந்து அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் தனது வாக்கினை செலுத்தினார்.

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.