Skip to main content

பயிர் சேதத்தை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழுவை அமைத்து முதல்வர் உத்தரவு! 

Published on 11/11/2021 | Edited on 11/11/2021

 

Chief Minister orders setting up of committee of ministers to inspect crop damage

 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (11.11.2021) மாலை மாமல்லபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில தினங்களாகவே தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்துவருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. அதேபோல், டெல்டா மாவட்டங்களிலும் தொடர் கனமழை பெய்துவருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்துவருகிறார்கள். இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாட்களுக்கு ஆய்வு மேற்கொள்கிறார். இதற்காக இன்று மாலை கடலூர் செல்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அங்கு இன்று மாலையே ஆய்வு மேற்கொள்கிறார். டெல்டா மாவட்டங்களில், மழை பாதிப்பு மற்றும் மழையால் பாதிப்படைந்துள்ள விளைநிலங்களையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார். 

 

அதேபோல், டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர் சேதத்தை ஆய்வுசெய்து அறிக்கை தர அமைச்சர்கள் குழுவை அமைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 

 

இந்தக் குழுவில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் ஆகியார் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினர் உடனடியாக டெல்டா மாவட்டங்களில் ஆய்வுசெய்து நிவாரண நடவடிக்கையைத் துரிதப்படுத்தவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திணறும் தலைநகர்; டெல்டாவில் வெடித்த விவசாயிகளின் போராட்டம்! 

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
rally in Delta district in support of Delhi struggle

விவசாய விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை, விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்து என்பன உள்ளிட்ட வேளாண் கோரிக்கைகளை வலியுறுத்த பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் டிராக்டர்களில் உணவு, மருந்து பொருட்களுடன் இந்தியத் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தச் சென்ற போது மாநில எல்லையிலேயே முள்வேலிகள், தடுப்புக்கட்டைகள் அமைத்து  தடுக்கப்பட்டனர்.

தடுப்புக்கட்டைகளை தகர்த்தெரிந்த விவசாயிகள் தடையை மீறி டெல்லி நோக்கி புறப்பட்ட போது சொந்த நாட்டு விவசாயிகள் மீதே கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் நிலைகுலையச் செய்தனர். அந்த தடைகளையும் தாண்டிச் செல்லும் போது ரப்பர் குண்டுகளால் சுடப்பட்டனர். கண்ணீர் புகை குண்டுகளால் ஏற்பட்ட நச்சுப் புகையால் மூச்சுத் திணறிய 65 வயது கியான் சிங் என்ற விவசாயியும், ரப்பர் குண்டு அடிபட்டு தலையில் காயமடைந்த 21 வயது இளம் விவசாயியும் போராட்டக்களத்திலேயே உயிர்நீத்தனர். இதற்கிடையில் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

rally in Delta district in support of Delhi struggle

அதன் பிறகும் விவசாயிகளை முன்னேற விடாமல் மத்திய அரசின் போலீசார் தடுத்து வருகின்றனர். விவசாயிகள் உயிர்ப்பலியானதால் தற்காலிகமாக முன்னேறிச் செல்வதை நிறுத்தி அதே இடத்தில் தங்கியுள்ளனர். அடுத்தகட்டமாக விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்துவிடாமல் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவர் அரணாக உள்ளது.

இந்திய விவசாயிகளுக்காக டெல்லி எல்லையில் போராடும் பஞ்சாப், அரியானா விவசாயிகளின் கோரிக்கைகளை வென்றெடுக்கவும், விவசாய நாடு என்று வெளியில் சொன்னாலும் சொந்த நாட்டு விவசாயிகளையே சுட்டு விரட்டும் மத்திய அரசை கண்டித்தும் இந்தியா முழுவதும் விவசாயிகள் போராட்டம் பற்றிக் கொண்டுள்ளது.

rally in Delta district in support of Delhi struggle

இந்த வகையில் புதுக்கோட்டை - தஞ்சை மாவட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து மாவட்ட எல்லை கிராமமான ஆவணம் கைகாட்டியில் டிராக்டர் பேரணியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்த நிலையில் நள்ளிரவில் அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து 100 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்திற்கு வந்த டிராக்டர்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர். ஆனால் திட்டமிட்டபடியே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு வந்த டிராக்டர்களையும் ஓரமாக நிறுத்தி வைத்திருந்தனர். அதே நேரத்தில் பாஜகவினரும் அதே பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

வரலாறு காணாத கனமழை; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Unprecedented heavy rains in california

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பொழிந்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. 

அதன்படி, கலிபோர்னியா பகுதியில் நேற்று (06-02-24) வரலாறு காணாத கனமழைக் கொட்டித் தீர்த்தது. இதில், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட சில இடங்களில் 25 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இந்த வெள்ளத்தின் போது பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் பலரும் அதில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மணிக்கு 78 மைல் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றால் கிட்டத்தட்ட 8,75,000 வீடுகளின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பலரது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

வரலாறு காணாத இந்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பு படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த மழை வெள்ளத்தால் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த வெள்ளம் குறித்து தேசிய வானிலை மையம் கூறியுள்ளதாவது, ‘5 முதல் 10 அங்குலங்கள் (12.7செ.மீ முதல் 25.4 செ.மீ) வரை பெய்துள்ளது. மேலும், இந்த மழையின் அளவு அதிகரிக்கக்கூடும்’ என்றும் தெரிவிக்கப்படுகின்றது.