Skip to main content

'தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்த திட்டமிடக் கூடியவர்களுக்கு இடமளிக்க கூடாது'-முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

nn

 

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் 'மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''தொடர்ச்சியாக உங்களை நான் சந்தித்து வருகிறேன். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் நாம் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொள்ள இருக்கிறோம். இங்கே கூடியுள்ள நீங்கள் அனைவரும் அரசுக்கு தகுந்த ஆலோசனைகளை எந்தவித தயக்கமும் இன்றி மக்கள் நலன் ஒன்றையே மையமாக வைத்துக் கொண்டு வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இன்று காலையில் நடைபெறும் இந்த அமர்வில், சட்ட ஒழுங்கு பராமரிப்பு குறித்து நாம் விவாதிக்க இருக்கிறோம். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைதியை ஏற்படுத்திக் காட்டுவது முதலாவது இலக்கு. இரண்டாவது பொது அமைதியை கெடுக்க நினைப்பவர்கள் முழுமையாக தடுக்கப்பட வேண்டும். அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முடியுமா என்று திட்டமிட கூடியவர்களுக்கு இடமளித்து விடக்கூடாது.

 

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் அந்த உள்நோக்கத்தோடு இத்தகைய சக்திகள் செயல்பட வாய்ப்புகள் உள்ளது. அதனை தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும். கள்ளச்சாராயம், போதைப் பொருட்கள் ஆகியவற்றை அறவே ஒழிக்க வேண்டும். இது நமது எதிர்கால தலைமுறறையை சீரழிக்கிறது. இது சம்பந்தமாக குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். மேலும் சாலை விபத்துகளால் மிக அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பது எனக்கு மிகுந்த கவலையளிக்கிறது. இந்த நிலையை மாற்ற காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்துத்துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து திட்டங்களை வகுத்து விபத்துகளை குறைப்பது குறித்து ஆய்வு செய்திட முயற்சிகளில் முழுமையாக ஈடுபட வேண்டும்.

 

சென்னை உள்ளிட்ட பல மாநகரங்களில் பொதுமக்களுக்கு சிரமம் தரக்கூடிய ஒன்றாக போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. அதனைக் குறைப்பதற்காக சிறப்புச் செயல் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் நடவடிக்கை எடுப்பதில் துளியும் சமரசம் இருக்க கூடாது. குற்றவாளிகளை உடனே கைது செய்து தண்டனை பெற்றுத்தருவதில் மும்முரம் காட்ட வேண்டும். பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமை செயல்கள் குறித்து அம்மக்கள் மாவட்ட அலுவலகத்திற்கு அச்சமின்றி தகவல் தெரிவிக்க பிரத்தியேக வாட்ஸ் அப் மற்றும் தொலைபேசி எண்ணை மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து அவர்களுக்கு உதவிட வேண்டும்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்