Chief Minister M. K. Stalin's urgent letter to the Union Minister

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், டோக்கியோ- சென்னை இடையே நேரடிவிமான சேவையை மீண்டும் இயக்குவது குறித்தும், சிங்கப்பூர்-மதுரை இடையேயான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதி ராதித்ய சிந்தியாவிற்கு இன்று (31-5-2023) கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் எழுதியுள்ள கடிதம் குறித்து தமிழ்நாடு அரசு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Advertisment

அதில், தமிழ்நாட்டில் 600க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால், கடந்த இருபதாண்டுகளில் ஜப்பான் நாட்டினரின் வருகை கணிசமான உயர்ந்துள்ளது என்றும் ஜப்பானில் கணிசமான தமிழர்கள் இருப்பதையும் தனது கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டுஅக்டோபர் மாதத்தில், ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஆல் நிப்பான் ஏர்வேஸ் (ANA) சென்னை மற்றும் டோக்கியோ இடையே நேரடி விமான சேவையைத் தொடங்கியது. கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் இது நிறுத்தப்பட்டது. ஆனால் இந்த சேவை மீண்டும் தொடங்கப்படவில்லை எனக் கூறியுள்ளார். நேரடி விமானப் போக்குவரத்து இல்லாததால் ஜப்பானுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான பயண தூரம் 7 மணி நேரம் அதிகரித்துள்ளது என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

2024 ஜனவரி மாதத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழ்நாடு நடத்தவுள்ள நிலையில், ஜப்பானிலிருந்து அதிக முதலீடுகளை ஈர்த்திட ஏதுவாக, நேரடி விமானங்களை மீண்டும் தொடங்குவது உண்மையில் வரவேற்கத்தக்க நடவடிக்கையாக இருக்கும். அதேபோல், சிங்கப்பூருக்கும், சென்னைக்கும், திருச்சிக்கும் இடையே தினசரி விமான சேவையும், சிங்கப்பூருக்கும், கோயம்புத்தூருக்கும் இடையே தினசரி ஒரு விமானமும் இயக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், சிங்கப்பூருக்கும் மதுரைக்கும் இடையே வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே விமானச் சேவை உள்ளதாக முதலமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார். சிங்கப்பூருக்கும் மதுரைக்கும் இடையே அதிக விமானங்கள் இயக்கப்பட வேண்டும்.

டோக்கியோ மற்றும் சென்னை இடையே நேரடி விமான இணைப்பை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் மற்றும் சிங்கப்பூர்-மதுரை இடையே விமானங்களின் எண்ணிக்கையை, குறைந்தபட்சம் ஒரு தினசரி விமானமாக அதிகரிக்க வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை தான் மீண்டும் வலியுறுத்துவதாகவும், இவற்றை முன்னுரிமை அடிப்படையில் மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதி ராதித்ய சிந்தியா பரிசீலித்திட வேண்டுமென்றும் கடிதத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.