Skip to main content

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்தவர்களுக்கு விருதுகளை வழங்கிய முதல்வர்!

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
The Chief Minister gave awards to those who served the differently abled

மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையிலும், அவர்களை சமுதாயத்தில் ஒருங்கிணைக்கும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கும் சிறந்த நிறுவனங்கள் மற்றும் தடைகளை கடந்து சிறப்பாக பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும் தமிழக அரசின் சார்பில் மாநில விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில்,மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்காக சிறந்த சமூக பணியாளர் விருது  எ.மோகன் என்பவருக்கும், சிறந்த நிறுவனத்திற்கான விருது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டது. சிறந்த ஆசிரியருக்கான விருது மனவளர்ச்சி குன்றியோருக்கு கற்பித்ததற்காக திருச்சியைச் சேர்ந்த தி ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி ஆஃப்  ஆசிரியர் அ. வாசுகி தேவிக்கும். செவித்திறன் குறைபாடுடையோருக்குக் கற்பித்தற்காக கிருஷ்ணகிரி அண்ணா நகர், நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஜா.அருண்குமாருக்கும் வழங்கப்பட்டது.

பார்வைத்திறன் குறைபாடுடையோருக்குத் கற்பித்ததற்காக மதுரை செயின்ட் ஜோசப் பார்வையற்றோர் பள்ளி ஆசிரியர் அ. பாக்கியமேரிக்கும், சிறந்த பணியாளர்  மற்றும் சுய தொழில் புரிபவருக்கான விருதினை கை, கால் பாதிக்கப்பட்டோர் மற்றும் தொழுநோய் குணமடைந்தோர் பிரிவில் எஸ். நீலாவதி (சிறந்த சுயதொழில் புரிபவர்), செ. சுதீஷ்குமார் (சிறந்த பணியாளர்), அறிவுசார் குறையுடையோர் பிரிவில் பா. முத்துக்குமார், செவித்திறன் பாதிக்கப்பட்டோர் பிரிவில் ரா. விஜயலெட்சுமி, பல்வகை மாற்றுத்திறனாளி பிரிவில் வி. சௌந்திர வள்ளி ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. மனநோயால் பாதிக்கப்பட்டோர் பிரிவில் இ. ஜாக்குலின் சகாயராணி, புற உலக சிந்தனையற்றோர் மற்றும் குறிப்பிட்ட கற்றலில் குறைபாடுடையோர் பிரிவில் ஆ. பிரேம்சங்கர் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய நிறுவனத்திற்கான விருதினை காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் சில்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும், சிறந்த ஆரம்பநிலை பயிற்சி மைய ஆசிரியருக்கான விருதினை செவித்திறன் குறைபாடுடையோருக்குக் கற்பித்ததற்காக காஞ்சிபுரம் - தமிழ்நாடு அரசு செவித்திறன் குறையுடைய இளம் சிறார்களுக்கான இலவச ஆரம்ப பயிற்சி மைய ஆசிரியர்  பாலகுஜாம்பாளுக்கும், அறிவுசார் குறையுடையோருக்கு கற்பித்ததற்காக கன்னியாகுமரி - சாந்தி நிலையம் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி ஆசிரியர் ஜெயசீலனுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய சிறந்த ஓட்டுநருக்கான விருதினை சுந்தர் வேலுவுக்கும், சிறந்த நடத்துநருக்கான விருதினை தர்சியஸ் ஸ்டீபனுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் கமல் கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

சார்ந்த செய்திகள்