தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 11 பேர் சரணடைந்த நிலையில் 11 பேரும் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடி காவலில் விசாரணைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இத்தகைய பரபரப்பான சூழலில் தான் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் போலீசார் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்தப் போது நேற்று (14.07.2024) அதிகாலையில் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்நிலையில் என்கவுண்டர் செய்யப்பட்ட திருவேங்கடத்தின் உடலை பிரேதப் பரிசோதனை செய்யவும், உடலை பெற்றுக்கொள்ளவும் அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் மறுப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக நீதிபதி தீபாவும், காவல்துறையினரும் நேற்று இரவு திருவேங்கடத்தின் குடும்பத்தினரிடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத்தொடர்ந்து திருவேங்கடத்தின் உறவினர் பிரேதப் பரிசோதனை செய்ய சம்மதம் தெரிவித்தனர்.
இதனையடுத்து அவரது உடல் நேற்று இரவு 10.30 மணி முதல் 12.00 மணி வரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரதேப் பரிசோதனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது உடல் குடும்பத்தினரிடம் சிறிது நேரத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது. மேலும் திருவேங்கடத்தின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படாமல் சென்னையிலேயே அடக்கம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையொட்டி திருவேங்கடத்தின் உறவினர்கள் இறுதி சடங்கிற்கு பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.