Skip to main content

சட்டப் பேரவைக்குள் குட்கா: உரிமைக்குழுவின் 2-வது நோட்டீஸுக்கு விதித்த தடையை நீக்கக்கோரி பேரவைச் செயலாளர் மனு தாக்கல்!

Published on 28/10/2020 | Edited on 28/10/2020

 

chennai highcourt

 

சட்டப் பேரவைக்குள் குட்கா பொருட்கள் கொண்டு சென்ற விவகாரத்தில், உரிமைக்குழு அனுப்பிய இரண்டாவது நோட்டீஸுக்கு தனி நீதிபதி விதித்த தடையை நீக்கக்கோரி, சட்டப் பேரவைச் செயலாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.



கடந்த 2017-ஆம் ஆண்டு சட்டப் பேரவைக்குள் குட்கா கொண்டு வந்ததாக அனுப்பப்பட்ட உரிமைக்குழு நோட்டீஸை எதிர்த்து,  எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நோட்டீசில் அடிப்படைத் தவறுகள் உள்ளதாகக் கூறி ரத்து செய்து, ஆகஸ்ட் 25-ஆம் தேதி தீர்ப்பளித்தது. மேலும், இந்த விவகாரத்தில் உரிமை மீறல் இருப்பதாகக் கருதினால், மீண்டும் நோட்டீஸ் அனுப்பி,  உரிய விளக்கங்களைப் பெற்று நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டிருந்தது.



அதன் அடிப்படையில், இரண்டாவது முறையாக அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்து,  மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்கை செப்டம்பர் 24-ல் விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்தும், வழக்கு குறித்து பேரவைத் தலைவர், செயலாளர், உரிமைக்குழு மற்றும் உரிமைக்குழுவின் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.



இந்த தடையை நீக்கக் கோரியும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரியும், சட்டமன்றச் செயலாளர், உரிமைக்குழு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சாஹி  அமர்வு, இடைக்காலத் தடையை நீக்க மறுத்ததுடன், மேல்முறையீடு மனுக்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏ-க்கள் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு,  வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.



இந்நிலையில், உரிமைக்குழு நோட்டீஸுக்கு விதித்த தடையை நீக்கக் கோரி, தனி நீதிபதி முன்பாக இருக்கும் வழக்கில் பேரவைச் செயலாளர் கே.சீனிவாசன் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு வந்தது உரிமை மீறலா? இல்லையா? என்பது குறித்து தீர்மானிக்க உரிமைக்குழுவுக்கு சுதந்திரம் அளித்துள்ள நிலையில், நோட்டீஸுக்கு தடை விதித்தது தவறானது என்றும், நோட்டீஸுக்கு ஆஜராகி விளக்கமளிக்க வாய்ப்பளித்துள்ள நிலையில், அதில் ஆஜராகாமல் தொடர்ந்த வழக்கில் தடைவிதிக்கப்பட்டுள்ளதால், மேற்கொண்டு விசாரணை நடத்த முடியாத நிலை உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

cnc


நோட்டீஸ் மீது தடை விதித்த வழக்கு, நாளை நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன்பு விசாரணைக்கு வரும்போது, பேரவைச் செயலாளர் மனு குறித்தும் முறையிட வாய்ப்புள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பாலியல் வழக்கில் சிக்கிய காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர்; நீதிமன்றம் உத்தரவால் அதிருப்தி?

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
high court order bail to Priest of Kalikampal temple caught in case

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சினிமா மோகத்தில் சென்னை வந்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அதேபோல் சில திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். அப்பெண்ணுக்கு கடவுள் பக்தி அதிகம் என்பதால் பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அப்பொழுது காளிகாம்பாள் கோவில் குருக்களாக இருந்த கார்த்திக் முனுசாமி என்பவர் அந்த பெண்ணுக்கு அறிமுகமாகியுள்ளார். பிறகு இருவரும் அடிக்கடி பேசிப் பழகி உள்ளனர். கார்த்திக் பென்ஸ் கார் ஒன்று வைத்திருந்த நிலையில் அந்தக் காரில் அவரை ஏற்றிக்கொண்டு வீட்டில் விடுவதாக அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் வீட்டுக்குச் சென்று அந்தப் பெண்ணிடம் தீர்த்தம் என எதையோ குடிக்க கொடுக்க, அவரும் குடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் மயக்கம் அடைந்த நிலையில் அப்பெண்ணை அர்ச்சகர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

தான் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யப்பட்டது அறிந்து அப்பெண் அர்ச்சகரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் பயந்த அவர் அப்பெண்ணை திருமணம் செய்து கொண்டு யாருக்கும் தெரியாமல் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக்கின் செல்போனை அப்பெண் ஆய்வு செய்தபோது பல பெண்களின் ஆபாசப் புகைப்படங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார். தன்னுடைய படங்களையும் அர்ச்சகர் கார்த்திக் பல நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளது மேலும் அப்பெண்ணுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் உடனடியாக காவல்துறையில் புகார் கொடுத்திருந்தார். இதுகுறித்து விருகம்பாக்கம் காவல்துறையினர் அர்ச்சகர் கார்த்திக் மீது ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து, விருகம்பாக்கம் மகளிர் போலீசார் கார்த்திக் முனுசாமியை கொடைக்கானலில் வைத்து கடந்த மே மாதம் 28ஆம் தேதி கைது செய்துள்ளனர். 

இதனிடையே, கோவில் அர்ச்சகரான கார்த்திக் முனுசாமி தனக்கு ஜாமீன் வேண்டி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான மனு இன்று விசாரணக்கு வந்தது. அப்போது காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமிக்கு நிபந்தை ஜாமீன் வழங்கியும், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒரு வாரம் கார்த்திக் முனுசாமி கையெழுத்திட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பாலியல் வழக்கில் சிக்கிய கார்த்திக் முனுசாமிக்கு ஜாமீன் வழங்க பாதிக்கப்பட்ட பெண் மற்றும் காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும் ஜாமீன் வழங்கியது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

அதிவேகமாக வந்த சொகுசு கார்; சாலையோரம் படுத்துறங்கிய இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
happened to the young man lying on the side of the road in chennai

சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (22). இவர் அந்த பகுதியில் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று பெசன்ட் நகர் சாலையோர நடைபாதையில் படுத்திருந்தார். இவர் மது அருந்திவிட்டு போதையில் படுத்து உறங்கியதாக கூறப்படுகிறது.  

இந்த நிலையில், அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த சொகுசு கார், சாலையோரம் படுத்திருந்த சூர்யா மீது ஏறி விபத்துக்குள்ளானது. இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சூர்யா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள், காரை மறிக்க முயன்ற போது காரில் இருந்த இரண்டு பெண்களும் அங்கிருந்து காருடன் தப்பி சென்றுள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த சூர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காருடன் தப்பிச் சென்ற இரண்டு பெண்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் சாலையோரம் படுத்திருந்த இளைஞர் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.