chennai high court youtube channel video

"கறுப்பர் கூட்டம்" எனும் யூட்யூப் சேனலில், கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை வெளியிட்ட நாத்திகன் என்கிற சுரேந்திரன், முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

Advertisment

சமீபத்தில் தமிழக பாஜக தரப்பில் சென்னை காவல் ஆணையரிடம் அளித்த புகாரில் - "கறுப்பர் கூட்டம்" என்ற யூட்யூப் சேனல் வெளியிட்ட வீடியோக்கள், இந்து மக்களின் உணர்வுகளை மிகவும் புண்படுத்தியுள்ளது. முருகக்கடவுள் மற்றும் கந்த சஷ்டி கவசம் பாடல் குறித்து மிகவும் அருவருக்கத்தக்க வகையிலும், ஆபாசமாகவும், ஹிந்து மதத்தையும் அதன் கடவுள் முருகரைஅசிங்கப்படுத்தியும், மேற்கண்ட சேனலில் வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்துமதத் தெய்வங்களையும், வழிபாட்டு முறைகளையும், இதிகாசங்களையும், புராணங்களையும் தொடர்ந்து இழிவுபடுத்தி, இந்தப் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இது, இந்து மக்களின் உணர்வுகளை மிகவும் புண்படுத்தியுள்ளது. மக்களின் மத்தியில் ஒருவித அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. அதனால், அதனை வெளியிட்ட சுரேந்திரன் நடராஜன் மற்றும் அதன் நிர்வாகத்தினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் அளிக்கப்பட்டது.

Advertisment

அந்தப் புகாரின் பேரில், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், கறுப்பர் கூட்டம் யூ ட்யூப் சேனல் மற்றும் நிர்வாகிகள் மீது சாதி, மத, இன ரீதியான மோதலைத் தூண்டுவது, அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சை கருத்துகளை வெளியிட்ட சுரேந்திரன் என்கிற நாத்திகன், முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், கலாச்சாரம், நம்பிக்கை என்ற பெயரில் சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காகவும், கல்வியறிவின்மை, அறியாமை ஆகியவற்றை ஒழிப்பதற்காகவும், பல்வேறு தகவல்களை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி 1- ஆம் தேதி வெளியிட்ட பதிவு தொடர்பாக, 6 மாதத்திற்குப் பிறகு ஜூலை 14-இல் அளித்த புகாரில், தன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். வலதுசாரி சக்திகளுக்கு எதிராகத் தொடர்ந்து பணியாற்றி வருவதால், அதை முடக்கும் நோக்கில் தன் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. அதனால், இந்த வழக்கில் கைதாவதிலிருந்து தவிர்க்க முன்ஜாமீன் வழங்க வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.