தமிழக அரசு நிர்பயா நிதியை எவ்வளவு செலவிட்டுள்ளது என்பது குறித்து பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு டில்லியில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான செலவினங்களுக்காக, நிர்பயா நிதியம் என்ற நிதியத்தை மத்திய அரசு உருவாக்கியது.

CHENNAI HIGH COURT NIRBHAYA FUND UNOIN GOVERNMENT

இந்த நிதியத்திற்கு, ஆரம்பகட்டமாக 10 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது. இந்த நிதியம், அனைத்து மாநிலங்களுக்கும் நிதியை ஒதுக்கி வருகிறது. நிர்பயா திட்டத்தின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்ட 190 கோடி ரூபாயில் வெறும் 6 கோடி ரூபாயை மட்டும் செலவழித்துள்ளதாகவும், மீத தொகையை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பிவிட்டதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, இந்த நிதியைப் பெற்று, 100 சதவீதம் செலவிடுவதை உறுதி செய்ய உயர்மட்டக் குழு அமைக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசம் உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

Advertisment

அந்த மனுவில், தமிழகத்தில் 2019 ஜனவரி முதல் மே மாதம் வரை 151 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 22 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 10 ஆயிரம் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், பெண்கள் பாதுகாப்புக்காக ஆண்டு தோறும் மத்திய அரசிடம் இருந்து நிதியைப் பெற்று, 100 சதவீதம் செலவிடுவதை உறுதி செய்ய உயர் மட்டக் குழு அமைக்க தமிழக உள்துறை செயலாளருக்கு உத்தரவிடவும் மனுவில் கோரியிருந்தார்.

Advertisment

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (18.12.2019) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நிர்பயா நிதி எவ்வளவு மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டது எவ்வளவு நிதி செலவிடப்பட்டது என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் 3- ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.