Skip to main content

ராயபுரத்தில் 91 பேருக்கு கரோனா- சென்னை மாநகராட்சி!

Published on 20/04/2020 | Edited on 20/04/2020


கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மஹாராஷ்டிரா, டெல்லி, தமிழகம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

chennai corporation rayapuram coronavirus strength


தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,477 ஆக அதிகரித்துள்ளது. இதில் 411 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 15 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் சென்னையில் எந்தப் பகுதியில் எத்தனை பேருக்கு கரோனா என்பதை மண்டலம் வாரியாகச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 91 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் திரு.வி.க. நகர்- 38, கோடம்பாக்கம்- 29, அண்ணா நகர்- 26, தண்டையார்பேட்டை- 30, தேனாம்பேட்டை- 36, பெருங்குடி- 7, அடையாறு- 7, திருவொற்றியூர்- 5, வளசரவாக்கம்- 5, ஆலந்தூர்- 5, சோழிங்கநல்லூர்- 2, மாதவரம்- 3 என மொத்தம் 285 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மணலி, அம்பத்தூரரில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை. நேற்றைய தினம் மட்டும் ராயபுரத்தில் 18, தேனாம்பேட்டையில் 17, தண்டையார்பேட்டையில் 4, திரு.வி.க. நகரில் 4, கோடம்பாக்கத்தில் 3, ஆலந்தூரில் 2, அண்ணா நகரில் 2 பேர் என மொத்தம் 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் பொறுப்பேற்பு!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
New Commissioner of Chennai Corporation takes charge

தமிழக அரசின் சார்பில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் நேற்று (16.07.2024) உத்தரவிட்டிருந்தார். இது குறித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டிருந்த உத்தரவில், ‘தமிழக உள்துறை செயலாளர் அமுதா பணியிட மாற்றம் செய்யப்பட்டு தமிழகத்தின் புதிய உள்துறை செயலாளராக தீரஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  சிட்கோ நிர்வாக இயக்குநராக இருந்த மதுமதி பள்ளிக்கல்வித்துறை செயலாளராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக அமுதா நியமிக்கப்பட்டுள்ளார். கால்நடை மற்றும் மீன்வளத்துறை செயலாளராக கோபால் நியமிக்கப்பட்டுள்ளார். தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் குமார் ஜெயந்த் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையராகக் குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார். 

New Commissioner of Chennai Corporation takes charge

மேலும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக சந்திரகலாவும், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக அருணாவும் நீலகிரி மாவட்ட ஆட்சியராக லஷ்மி பையா தன்னீரும், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக பிரியங்காவும் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக ஆகாஷூம் நியமிக்கப்பட்டனர்.

அதே போன்று அரியலூர் மாவட்ட ஆட்சியராக ரத்தினசாமியும், கடலூர் மாவட்ட ஆட்சியராக ஆதித்யா செந்தில்குமாரும், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக அழகுமீனாவும், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக கிரேஸ் லால்ரிண்டிகி பச்சாவ்வும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக சிம்ரன்ஜீத் கலோனும் நியமிக்கப்பட்டனர்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு தமிழகம் நேற்று ஒரே நாளில் முக்கிய துறைகளின் செயலாளர்கள் உள்பட 65 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். 

New Commissioner of Chennai Corporation takes charge

இந்நிலையில் கூடுதல் தலைமைச் செயலாளரும், சென்னை மாநகராட்சி ஆணையருமான ஜெ. ராதாகிருஷ்ணன் தனது பொறுப்புகளை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்ட குமரகுருபரனிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையராக குமரகுருபரன் பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

Next Story

காலையிலேயே களமிறங்கிய அதிகாரிகள்; சென்னையில் பிரபல கடைகளுக்கு சீல்

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
Famous shops in Chennai sealed

சென்னையில் சொத்து வரி செலுத்தாத கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டி சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தி.நகர், பாண்டி பஜார், உஸ்மான் சாலை உள்ளிட்ட பல இடங்களில் சொத்து வரி செலுத்தாத கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தததுடன் நோட்டீஸ் ஒட்டி சென்றுள்ளனர். தி.நகரில் மட்டும் 39 கடைகளில் மொத்தமாக 90 லட்சம் ரூபாய் சொத்து வரி செலுத்தவில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. சொத்து வரியை செலுத்த வேண்டும் என பலமுறை அறிவிப்புகள் கொடுக்கப்பட்டும் தற்பொழுது வரை சொத்து வரி நிலுவையில் இருப்பதால் தற்போது இந்த அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மொத்தமாக 15 மாநகராட்சி மண்டலங்களிலும் நிலுவையில் உள்ள சொத்து வரியை வசூலிக்கும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரங்கநாதன் தெருவில் உள்ள சண்முகா ஸ்டோர்ஸ் 35 லட்சம் ரூபாய் சொத்து வரி நிலுவை தொகை வைத்துள்ளதாக அக்கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சரவணா ஸ்டோர்ஸ் கடையின் சொத்து வரி நிலுவைத் தொகை 30.25 லட்சம் ரூபாய் எனவும் அதிகாரிகள் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.