Skip to main content

பள்ளி திறப்பு தேதியில் மாற்றம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

Change in school opening date? Explanation by Minister Anbil Mahesh

 

தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், 2023 - 2024 ஆம் கல்வி ஆண்டுக்காக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. அதேசமயம், வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

 

இந்நிலையில், திட்டமிட்டபடி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஜூன் 1ம் தேதியும், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் இதில் மாற்றம் ஏதும் இருந்தால் முதலமைச்சர் அறிவிப்பார் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். 

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “நேற்று மாவட்டக் கல்வி அலுவலகர்களுடன் காணொளிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் திருவண்ணாமலை, கரூர், வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாக மாவட்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். பள்ளி திறப்பைத் தள்ளிவைக்க பெற்றோர் கோரிக்கை வைக்காவிட்டாலும் வெயிலின் தாக்கம் உள்ளது உண்மைதான். வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் வகுப்பறைகளில் அமர்வது கடும் சிரமம் என்பதை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இரண்டு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார். பள்ளிகள் திறப்பு தேதி குறித்து மிக விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.  

 


இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘பள்ளிகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வேண்டும்’ - தமிழக அரசுக்குப் பரிந்துரை

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Recommendation to Tamil Nadu Govt for Remove caste names in schools

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஏற்படும் சாதி தொடர்பான வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பது குறித்து கருத்து தெரிவிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதில், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கருத்துகள் தெரிவிக்க ஒரு நபர் ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது. 

இந்த நிலையில், ஓய்வுபெற்ற கே.சந்துரு தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை தயார் செய்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் நேற்று (18-06-24) சமர்பித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, ‘பள்ளி பாடத்திட்டத்தில் சமூக நீதி, சமுத்துவம், சாதி அடிப்படையிலான பாகுபாடு இல்லாத அளவுக்கு தலைப்புகளைச் சேர்க்க வேண்டும். இது தொடர்பான பொருத்தமான மாற்றங்களைப் பரிந்துரைக்க கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களைக் கொண்ட சமூகநீதி கண்காணிப்புக் குழுவை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நியமிக்க வேண்டும். அரசுப் பள்ளிகளின் பெயர்களில் ஆதிதிராவிடர் நலத்துறை உட்பட எந்தச் சாதிய அடையாளங்களும் இருக்கக் கூடாது.

தனியார் பள்ளிகளில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும். சாதி அடையாளங்கள் இருக்கக் கூடாது என்ற உறுதிமொழி பெற்ற பிறகே, புதிய பள்ளி தொடங்க அனுமதி அளிக்க வேண்டும். குறிப்பிட்ட சாதி ஆதிக்கமாக உள்ள பகுதிகளில் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்களைத் தலைமை ஆசிரியர்களாக நியமிக்கக் கூடாது. ஆசிரியர்களை தேர்வு செய்யும்போது சமூக நீதி சார்ந்த அவர்களின் நிலைப்பாட்டை கண்டறிய வேண்டும். கைகளில் வண்ணக் கயிறுகள், நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும். மாணவர்களின் வருகை பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் சாதி பெயர் இடம்பெறக் கூடாது.  மாணவர்களின் சாதி விவரங்களை ரகசியமாக வைக்க வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

முடிந்தது கோடை விடுமுறை; இன்று பள்ளிகள் திறப்பு

Published on 10/06/2024 | Edited on 10/06/2024
nn

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜுன் 10 ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி கோடை விடுமுறை முடிந்த நிலையில் தமிழக முழுவதும் இன்று அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்பட இருக்கிறது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட உள்ளன. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் இன்றைய நாளிலேயே பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளது. பஸ் பாஸ் விநியோகிக்கப்படாத நிலையில் மாணவர்கள் அடையாள அட்டையை வைத்து பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகளை திறக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ஏற்கனவே வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தார். அதன்படி பள்ளி வகுப்பறை, ஆசிரியர்கள் அறை, தலைமை ஆசிரியர் அறை என அனைத்தும் சுத்தம் செய்யப்பட வேண்டும்; மழை நீர் கால்வாய்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்; மேற்கூரைகளில் குப்பை இல்லாததை உறுதி செய்ய வேண்டும்; பள்ளி வளாகம் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்; பள்ளி திறந்த அன்று ஒன்றாம் வகுப்பில் மாணவர்கள் முழுமையாக சேர்ந்ததை உறுதி செய்து கொள்ள வேண்டும்; பள்ளி திறக்கும் நாளன்று மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.