Chance of heavy rain in Chennai  Met Dept informs

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனையடுத்து தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழகம் முழுவதும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது.

Advertisment

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தமிழகத்தின் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இன்று (12.12.2024) காலை 10 மணிக்குள் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அதே சமயம் அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று (12.12.2024) காலை 10 மணிக்குள் இடி மற்றும் மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதற்கிடையே கனமழை காரணமாகப் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று (12.12.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படும் பள்ளி,கல்லூரிகளுக்கும் இன்று (12.12.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சென்னை, விழுப்புரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், திண்டுக்கல், திருவாரூர், காஞ்சிபுரம், அரியலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தூத்துக்குடி, சேலம்மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (12.12.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இன்று (12.12.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் திருநெல்வேலியில் பிற வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த பருவத்தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. எனவே இதற்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment