
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சிஇஓ ராஜினாமா செய்துள்ளார்.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான எஸ். கிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகப் பதவி விலகுவதாகத் தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார். அதே சமயம் இவருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் இருக்கும் நிலையில் ராஜினாமா செய்துள்ளார். இவரின் ராஜினாமா நிதியாளர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாகச் சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் வங்கிக் கணக்கில் கடந்த 9 ஆம் தேதி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியிலிருந்து ரூ. 9 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.