Skip to main content

“மத்திய அரசு தயாராக உள்ளது” - ஆளுநர் ஆர்.என். ரவி

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
Central Government is ready Governor RN Ravi on rescue and relief work

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாகக் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதே சமயம் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் 4வது ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்கக் கோரவும், தற்போது பெய்து வரும் அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து எடுத்துக் கூறி ஆலோசிக்கவும், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரம் கோரி கடிதம் எழுதி இருந்தார்.

இதனையடுத்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை பிரதமர் மோடி இன்று இரவு 10.30 மணிக்கு சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளார். இதன் மூலம் பிரதமர் மோடியை முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள விரைந்து நிதி ஒதுக்க வலியுறுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Central Government is ready Governor RN Ravi

இந்த சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் செய்தியாளர்கள், ஆளுநர் தமிழ்நாட்டில் பல அலுவலர்களை வைத்து கூட்டங்களை நடத்தி வருவது குறித்தும், இதற்கு பல கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருவது பற்றியும் கேள்வி எழுப்பினர். அதற்கு முதலமைச்சர், “கொரோனா போன்ற பேரிடர் ஏற்பட்டபோது, பிரதமர்தான் ஆலோசனை கூட்டங்களை நடத்தி ஆலோசனைகளை வழங்கி கொண்டிருந்தார். அப்போது குடியரசுத் தலைவர் ஏதாவது செய்திருந்தால், என்ன ரியாக்‌ஷன் வருமோ. அதே ரியாக்‌ஷன் தான் இப்போது” எனத் தெரிவித்திருந்தார்.

Central Government is ready Governor RN Ravi

இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மத்திய அரசுத் துறைகள் மற்றும் பாதுகாப்புப் படைகள் மேற்கொண்டு வரும் மீட்பு நிவாரணப் பணிகளை ராஜ் பவனில் நடைபெற்ற கூட்டத்தில் ஆய்வு செய்தார். இது குறித்து ராஜ்பவன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்திய ராணுவம், கடற்படை, கடலோர காவல் படை, விமானப்படை, தேசியப் பேரிடர் மீட்புப்படை (என்.டி.ஆர்.எஃப்), ரயில்வே, பிஎஸ்என்எல், இந்திய வானிலை மையம் (ஐஎம்டி), இந்திய விமானப் போக்குவரத்துத்துறை ஆணையம் (ஏஏஐ) மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மழை வெள்ள பாதிப்பால் குறிப்பாக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் நிலைமை மோசமாக உள்ளது. மத்திய அரசுத் துறைகள் அவற்றின் வளங்களை மாநில அரசு அழைத்தவுடன் பணியாற்றும் வகையில் தயாராக வைத்துள்ளன. மேலும் மாநில அரசால் கோரப்படும்போது அவை பணியில் ஈடுபட்டு வருகின்றன. மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் உத்தரவின்படியும் தேவைக்கேற்ப இயன்ற வகையில் சொந்தமாகவும் அவை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுகின்றன.

Central Government is ready Governor RN Ravi

இந்த கூட்டத்தில் பங்கேற்ற சில அமைப்புகள், போதிய ஒருங்கிணைப்பு இல்லாதது மற்றும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஒட்டுமொத்த நிலைமையை போதிய வகையில் மதிப்பிடாதது போன்ற காரணங்களால், எத்தனை வளங்கள் சரியாக தேவை மற்றும் எங்கெல்லாம் படையினரை அனுப்ப முன்னுரிமை தர வேண்டும் என்பது தெளிவற்று உள்ளதாக கவலை தெரிவித்தன. தற்போதுள்ள மோசமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு கூடுதல் வளங்களை கையிருப்பில் வைத்திருக்குமாறு அவர்களை ஆளுநர் கேட்டுக் கொண்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மாநில அரசின் எந்தவொரு பிரதிநிதியும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்