Skip to main content

தமிழக அரசுக்கு மத்தியக் குழு பாராட்டு! 

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
The central committee praises the Tamil Nadu government

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து பேரிடர் ஏற்பட்டது. இந்நிலையில் நிவாரணப் பணிகளுக்காக மத்தியக் குழு தமிழகம் வந்துள்ளது. இரண்டு குழுக்களாகப் பிரிந்து வட மற்றும் தென் சென்னை பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் இக்குழு வருகை தந்துள்ளது. இக்குழுவினர் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனாவுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். மத்திய ஆய்வுக் குழுவினர் இரண்டு குழுக்களாகப் பிரிந்து முதல் குழு சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

இதற்கிடையே மத்திய குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, “புயல், வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு மிகச் சிறப்பாக கையாண்டதற்காக பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதிக அளவிலான மழை பெய்ததால் தண்ணீர் தேங்கியது. இருப்பினும் தமிழக அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இருந்த போதிலும், எதிர்பாராத விதமாகப் புயல் சென்னை அருகே நீண்ட நேரம் மையம் கொண்டதால் பாதிப்பு அதிகமானது.

கடந்த 2015 ஆம் ஆண்டு மழை வெள்ளத்தை ஒப்பிடும்போது மிக விரைவாகச் சென்னை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. தமிழக அரசின் நடவடிக்கையால் உயிர்ச்சேதம் மிகவும் குறைந்துள்ளது. வெள்ள பாதிப்புகளில் இருந்து சென்னை மீண்டு வருவதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்" என மத்திய குழுவினர் தெரிவித்தனர். தொடர்ந்து, மத்தியக் குழுவினர் நாளை மறுநாள்( 14.12.2023) முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை செய்த பின்னர் டெல்லி திரும்புகின்றனர். மத்திய அரசிடம் இது குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளனர்.

சார்ந்த செய்திகள்