Skip to main content

சி.பி.ஐ.யின் புதிய இயக்குநர் யார் ?  - ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் பரபரப்பு ! 

Published on 27/01/2019 | Edited on 27/01/2019
c


இந்தியாவின்  உயரிய புலனாய்வு அமைப்பான  சி.பி.ஐ.யில் ஏற்பட்ட அதிகார மோதல்களும், ஊழல் குற்றச்சாட்டுகளும் அந்த அமைப்பின் மீதான நம்பகத்தன்மையை தகர்த்தெறிந்தது. சி.பி.ஐ.யின் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீதே சி.பி.ஐ.யில் ஊழல் வழக்குப் பதிவு செய்ய சி.பி.ஐ.இயக்குநர் அலோக்வர்மா உத்தரவிட்ட விவகாரம் தேசிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தின. இருவரையும் கட்டாய பதவிப்பறிப்பில் சி.பி.ஐ.யிலிருந்தே வெளியேற்றியது பிரதமர் அலுவலகம். சி.பி.ஐ.யின் தற்காலிக இயக்குநராக நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டார். 

 

இந்த நிலையில் , தனக்கு எதிரான நடவடிக்கையை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அலோக்வர்மா. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 'அலோக்வர்மாவை இயக்குநர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது ' என அறிவித்ததுடன், 'இயக்குநர் பதவி குறித்து பிரதமர் தலைமையிலான உயர்நிலைக் கமிட்டி கூடி விவாதித்து முடிவெடுக்க வேண்டும் ' எனவும் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, விவாதித்த பிரதமர் மோடி தலைமையிலான குழு, அலோக்வர்மாவை இயக்குநர் பதவியிலிருந்து இடமாற்றம் செய்து, தீயணைப்புத் துறைக்கு மாற்றியது. மேலும், புதிய இயக்குநரை தேர்ந்தெடுக்கும் வரை நாகேஸ்வரராவையே மீண்டும் தற்காலிக இயக்குநராக நியமித்தது பிரதமர் அலுவலகம். இந்த நிலையில், தீயணைப்புத்துறையின் இயக்குநர் பதவியை ஏற்க மறுத்ததுடன் , தன்னை ஓய்வு பெற்ற அதிகாரியாக அறிவித்து மத்திய அரசின் பணியாளர் துறையின் செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைத்தார் அலோக்வர்மா. ஆனால், இதனை ஏற்றுக்கொண்டு அலோக்வர்மாவை விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது மத்திய அரசு. அதேசமயம், அலோக் வர்மாவுக்கு எதிராக மத்திய கேபினெட் செக்ரட்டரிக்கு ராகேஸ் அஸ்தானா அனுப்பிய ஊழல் குற்றச்சாட்டுகளை, மத்திய விஜிலென்ஸ் ஆணையத்துக்கு அணுப்பி வைத்து, இதன் மீது தீவிர கவனம் செலுத்துமாறு  அழுத்தம் கொடுத்தது மத்திய அரசு. இதனைத் தொடர்ந்து, அலோக்வர்மாவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்த விஜிலென்ஸ் ஆனையம், ' ஊழல் நடந்திருக்க முகாந்திரம்  இருப்பதால் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் ' என உச்சநீதிமன்றத்தில் தற்போது தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம், மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்தியில் மீண்டும் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது. 

 


இதற்கிடையே,  சி.பி.ஐ.யின் புதிய இயக்குநர் நியமனம் குறித்து உயர்நிலை குழுவைக் கூட்டி விவாதித்திருக்கிறார் பிரதமர் மோடி. இந்த விவாதத்தில்,  ஐந்துக்கும் மேற்பட்ட மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டிருக்கின்றன. புதிய இயக்குநர் நியமனம் குறித்த பரிசீலனைப் பட்டியலில்  உத்தரபிரதேச மாநில டி.ஜி.பி. ஓம்பிரகாஷ்சிங்கின் பெயர் முதலிடத்தில் இருப்பதாக   ஐ.பி.எஸ். வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.


 

சார்ந்த செய்திகள்