Skip to main content

நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம் உள்ளிட்ட பலருக்கு சிபிசிஐடி சம்மன்

Published on 29/05/2024 | Edited on 29/05/2024
CBCID summons Nayanar Nagendran, Kesava Vinayagam and many others

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை சமயத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

இதில் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் கோட்டாவில் அவர்கள் பயணித்தது தெரியவந்தது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு இந்த பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கைது செய்யப்பட்ட மூவர் மீதும் தேர்தல் பறக்கும் படை அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்த பணம் தன்னுடையது அல்ல என  நயினார் நாகேந்திரன் தெரிவித்து வந்தார். நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலருக்கும் சம்மன் கொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. தொடர்ச்சியாக இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்ற நிலையில் வழக்கு சிபிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவரோடு மட்டுமல்லாது பாஜக அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகம், தொழில் பிரிவு தலைவர் கோவர்தன், நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் ஆகியோருக்கும் சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.

சார்ந்த செய்திகள்