Skip to main content

நாங்குநேரியில் மீண்டும் பரபரப்பு; அரசு பள்ளி சுவற்றில் சாதிய வாசகங்கள்

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

 Caste slogans on government school walls resurgence in Nanguneri

 

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த மாதம் பள்ளி மாணவன் மற்றும் அவரது தங்கை சக மாணவர்களால் அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டு நெல்லை அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இதையடுத்து, காவல்துறையினர் மற்றும் கல்வி அதிகாரிகளும் அங்குள்ள பள்ளிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் நாங்குநேரியில் மேலும் ஒரு சம்பவம், சங்கர் ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் அரங்கேறியுள்ளது. இந்தப் பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் வகுப்பறை சுவற்றில் சாதிய வன்முறையைத் தூண்டும் வகையில் அவதூறான வாசகங்களை எழுதியிருந்தனர்.

 

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் இது குறித்து நாங்குநேரி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில், நாங்குநேரி துணைக் கண்காணிப்பாளர் ராஜூ, காவல் ஆய்வாளர் ஆதம் அலி மற்றும் காவல்துறையினர் பள்ளிக்கு சென்று பார்வையிட்டனர். அங்கு சுவற்றில் எழுதியிருந்த அவதூறு வாசகங்களை அழித்துள்ளனர். அதன் பின்னர், இது குறித்து பள்ளி மாணவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். 

 

அவர்கள் நடத்திய விசாரணையில், இந்த விவகாரத்தில் 4 மாணவர்கள் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தெரியவந்தது. அதன் பிறகு அவர்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 4 மாணவர்களையும் கைது செய்தனர். கைதான 4 மாணவர்களும் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர். பள்ளிக்கூட வகுப்பறை சுவற்றில் சாதிய வன்முறையைத் தூண்டும் வகையில் அவதூறாக எழுதியிருந்த 4 மாணவர்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க முடியாது” - போக்குவரத்துத்துறை அதிரடி!

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
Transport Dept says police cant travel in buses without paying

காவலர்கள் கட்டணமின்றி அரசுப் பேருந்தில் பயணிக்க முடியாது என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரில் இருந்து தூத்துக்குடி சென்ற அரசு பேருந்தில் காவலர் ஆறுமுகப்பாண்டி என்பவர் பயணம் மேற்கொண்டார். அப்போது பேருந்தின் நடத்துநர் காவலர் ஆறுமுகப்பாண்டியிடம் பயணச்சீட்டு எடுக்க கூறியுள்ளார். அதற்கு ஆறுமுகப்பாண்டி, ‘காவலர் சீருடையில் இருப்பதால் பயணச்சீட்டு எடுக்க முடியாது’ என கூறி நடத்துநரிடம் வாக்குவாதம் செய்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போக்குவரத்துத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், “காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை. அதே சமயம் உரிய வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும். மற்ற நேரத்தில் காவலர்கள் கண்டிப்பாக டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக நாங்குநேரி காவலர் ஆறுமுகப்பாண்டி மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத்துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“அந்த ஒரு பதிலுக்காகவே சின்னதுரையை பார்க்க வந்தேன்” - பாலாஜி

Published on 09/05/2024 | Edited on 09/05/2024
thadi balaji meet nanguneri student chinnadurai

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பள்ளி மாணவன் மற்றும் அவரது தங்கை சக மாணவர்களால் சாதிய வன்முறை காரணமாக அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டு நெல்லை அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். மேலும், இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் 2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 6ஆம் தேதி வெளியானது. அதில் கொடூர தாக்குதலுக்கு ஆளான மாணவர் சின்னதுரை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்தார். இந்தத் தேர்வில் அவர், தமிழ் - 71, ஆங்கிலம் - 93, பொருளியல் - 42, வணிகவியல் - 84, கணக்குப்பதிவியில் - 85, கணினி அறிவியல் - 94 என மொத்தம் 469  மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சின்னதுரை மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் அழைத்து பாராட்டினார். இதையடுத்து பா.ரஞ்சித், மாணவர் சின்னதுரை மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து பாராட்டி, சின்னதுரைக்கு புத்தகங்கள் வழங்கினார். இப்படி அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரும் சின்னதுரைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காமெடி நடிகர் பாலாஜி, திருநெல்வேலிக்கு சென்று, சின்னதுரையை அவரது வீட்டில் சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளார். 

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பல விஷயங்களைக் கடந்து சின்னதுரை இந்த விஷயத்தை பண்ணியிருக்கார். பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்று அவரது குடும்பத்தினருக்கு பெருமை சேர்த்து கொடுத்திருக்கார். எல்லாத்தையும் விட பெரிய விஷயம், முதல்வரை சந்தித்த பின் அவர் கொடுத்த பேட்டியில் சொன்னதுதான். தன்னை தாக்கியவர்களும் தன்னை மாதிரி பெரிய அளவில் படிச்சு, ஒரு இடத்துக்கு வர வேண்டும் என சொன்னது. அந்த ஒரு பதிலுக்காகவே அவரை பார்க்க வேண்டும் என வந்தேன். எல்லாத்தையும் விட முதல்வர் சின்னதுரையை அழைத்து, அனைத்து விதமான உதவிகளையும் செய்வதாக சொல்லியிருக்கிறார். அவருக்கு நன்றி” என்றார். மேலும் சின்னதுரை மற்றும் அவரது குடும்பதினருக்கும் எந்த உதவி வேண்டுமானாலும் தன்னால் முடிந்ததை செய்வேன் என உறுதியளித்தார்.