/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ko.jpg)
தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அரசுக்கு எதிராக வாக்களித்த தற்போதைய துணை முதல்வர் பன்னிர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய கோரி திமுக கொறடா சக்கரபாணியும், தினகரன் ஆதரவு வெற்றிவேல் உள்ளிட்ட தகுதி நீக்கம் செய்யப்பட்ட நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அமரேந்திர்சிங் சரண், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்ய துரிதமாக செயல்பட்ட சபாநாயகர், அரசுக்கு எதிராக வாக்களித்தது தொடர்பான பன்னீர்செல்வம் அணியினருக்கு எதிராக பல மாதங்களுக்கு முன் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என வாதிட்டார். கட்சியில் பிளவு ஏற்பட்டு, தேர்தல் ஆணையத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், பன்னீர்செல்வம் மீதான புகார் மீது நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை எனவும் அமரேந்திர சிங் சரண் வாதிட்டார். சபாநாயகர் மீது புகார் கூறும்போது, அவர்தான் நேரடியாக பதில் சொல்ல வேண்டுமே தவிர மூன்றாம் நபர் மூலம் பதிலளிக்க முடியாது என வாதத்தில் குறிப்பிட்டார்.
அதன் பின்னர் முதல்வர் தரப்பு வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், அரசுக்கு ஆதரவாக வாக்களிக்களிக்க வேண்டும் என அரசு கொறடா உத்தரவே பிறப்பிக்காத நிலையில், அதை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மீறியதாக எடுத்துக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.
அப்போது சக்கரபாணி மற்றும் வெற்றிவேல் ஆகியோரின் வழக்கறிஞர்கள் குறுக்கிட்டு, பிப்ரவரி 18ஆம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்தில் பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்துள்ளது, ஆனால் அப்படி உத்தரவு பிறப்பிக்கவில்லை என தற்போது கூறுவது நீதிமன்ற அவமதிப்பாகும் என வாதிட்டனர்.
இதையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதிகள் நாளைய தினத்துக்கு ஒத்திவைத்தனர்.
- சி.ஜீவா பாரதி
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)