Skip to main content

நகைக் கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்க லஞ்ச வேட்டை; கூட்டுறவுச் சங்க செயலாளர் மீது வழக்கு!      

Published on 04/09/2023 | Edited on 04/09/2023

 

case  filed against  secretary of the cooperative society who asked for a bribe

 

சேந்தமங்கலம் அருகே, நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்க லஞ்சம் வசூலித்த கூட்டுறவுச் சங்க செயலாளர் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.    

 

நாமக்கல் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர் கர்ணன். இவர், மூன்று நாள்களுக்கு முன்பு மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு  காவல்துறையில் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியுள்ளதாவது: சேந்தமங்கலம் பேளுக்குறிச்சியில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் கோவிந்தராஜ் (55) என்பவர், கடந்த 2021ம் ஆண்டு முதல் பொறுப்பு செயலாளராகப் பணியாற்றி வருகிறார். தமிழகத்தில் உள்ள கூட்டுறவுக் கடன் சங்கங்களில், 2021 மார்ச் 31ம் தேதி வரை 5 பவுனுக்குக் கீழ் நகை அடமானக் கடன் பெற்றவர்களுக்கு முழுமையாகக் கடன் தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி, பேளுக்குறிச்சி கூட்டுறவு கடன் சங்கத்தில் 311 பேர் இந்தத்  திட்டத்தில் பயனாளிகளாகக் கண்டறியப்பட்டனர்.     

 

இந்த சங்கத்தின் உறுப்பினர் யுவராணி என்பவர், 30 கிராம் நகையை அடமானம் வைத்து, கடந்த 29.1.2021ம் தேதி 89 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். அவர், கடன் தள்ளுபடி சான்றிதழ் கேட்டு, சங்க செயலாளர் (பொறுப்பு) கோவிந்தராஜை அணுகியுள்ளார். அப்போது அவர், 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால், நகை அடமானக் கடன் தள்ளுபடி சான்றிதழை உடனடியாக கொடுத்து விடுவதாகக் கூறியுள்ளார். யுவராணியிடம் மட்டுமின்றி, கீர்த்தனா, சந்திரா, சீனிவாசன், சிலம்பரசன் ஆகிய உறுப்பினர்களிடமும் லஞ்சம் கேட்டுள்ளார்.     

 

மேலும், 28.3.2022ம் தேதி, கந்தசாமி என்ற உறுப்பினருக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்க 1500 ரூபாய் லஞ்சம் வசூலித்துள்ளதாகவும்,  துணைப் பதிவாளர் கர்ணன் தனது புகாரில் கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பி சுபாஷினி நடத்திய முதல்கட்ட விசாரணையில், கோவிந்தராஜ் மீதான புகாரில் முகாந்திரம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது லஞ்சம் கேட்டு மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் கூட்டுறவுத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்