Skip to main content

அத்துமீறிய நிதி நிறுவன ஊழியர் மீது வழக்குப்பதிவு

Published on 06/10/2023 | Edited on 06/10/2023

 

case file for employee of the financial institution

 

தேனி மாவட்டம் அன்னை இந்திரா நகர்ப் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் தன்னுடைய வீட்டை அடமானம் வைத்து மூன்று லட்ச ரூபாய்க் கடனாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி சூழல் காரணமாக ஒன்பது மாதமாகக் கடன் தவணையைக் கட்ட முடியாமல் இருந்துள்ளார். இதனால் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் 9 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து  வாங்கிய கடனை பிரபு முறையாகச் செலுத்தி வந்துள்ளார்.

 

அதன்படி கடந்த செப்டம்பர் மாதமே முழு கடன் தொகையும் கட்டியதாகப் பிரபு தரப்பில் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கடன் தொகையைக் கட்டியதால் வீட்டுப் பத்திரம் வேண்டும் எனத் தனியார் நிதி நிறுவனத்திடம் கேட்டுள்ளார். அப்பொழுது பிரபுவின் வீட்டிற்கு வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் இரண்டு பேர் கடனைச் செலுத்தவில்லை எனக்கூறி இருசக்கர வாகனங்களை எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் கடும் அதிருப்தியடைந்த பிரபு, காவல்துறையில் இது குறித்து புகார் கொடுத்து தனது இருசக்கர வாகனங்களை மீட்டுள்ளார்.

 

இதனால் ஆத்திரமடைந்த நிதி நிறுவன ஊழியர்கள், 'போலீசில் புகார் கொடுத்து எங்களை அசிங்கப்படுத்திவிட்டாய். உன்னை சும்மா விடமாட்டோம்' என மிரட்டி உள்ளனர். இதனையடுத்து நேற்று முன்தினம் தனியார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் மகேந்திர பிரபு மது போதையில், பிரபுவின் வீட்டிற்குச் சென்று பெயிண்ட் மூலம் 'வெரிடாஸ்' நிறுவனத்தில் கடன் பெற்ற வீட்டுக் கடன் கட்டவில்லை' எனச் சுவரில் எழுதியுள்ளார். இது குறித்து வீட்டு உரிமையாளர் பிரபு கேட்டபோது, 'அப்படித்தான் செய்வேன்' என்று மிரட்டும் தொனியில் பேசியதாக பிரபு தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தனியார் நிதி நிறுவன ஊழியர் மகேந்திர பிரபு மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்