Skip to main content

அரசு மேல்நிலைப்பள்ளியில் நீட் தேர்வு பயிற்சி மையத்தை செயல்படுத்த உத்தரவிட கோரி வழக்கு

Published on 21/03/2018 | Edited on 21/03/2018

 

bb


தேனி மாவட்டம் லோயர்கேம்ப் அரசு மேல்நிலைப்பள்ளியில் நீட் தேர்வு பயிற்சி மையத்தை செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரிய வழக்கில் தேனி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

தேனி லோயர்கேம்ப்  பகுதியைச் சேர்ந்த திருமாவளவன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் "தேனி லோயர்கேம்ப் அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய சுமார் 350 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.  கடந்த 2013 ஜனவரியில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, இந்த பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி நிலையில் தற்போது, (RMSA)புதிய கட்டிடத்துடன், நவீன வகுப்பறையோடு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசு துவங்க உள்ள நீட் தேர்வு பயிற்சி மையமாக தேனி மாவட்ட கம்பம் ஒன்றியத்தில், லோயர்கேம்ப் அரசு மேல்நிலைப்பள்ளி 276ஆவது பள்ளியாக இடம்பெற்றுள்ளது.

 

கம்பம் ஒன்றியத்தில் வேறு பள்ளிகள் இல்லாத நிலையில், பிற அரசுப்பள்ளி மாணவர்களும், இப்பள்ளியை நீட் தேர்வு பயிற்சி மையமாக ஆன்லைனில் விண்ணப்பித்தனர். இந்நிலையில், தற்போது, இப்பள்ளியில் நீட் தேர்வு பயிற்சி மையத்தை செயல்படுத்தாமல், தனியார் கம்பம் சிபியு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் நீட் தேர்வு பயிற்சி மையத்திற்கு செல்லுமாறு மாணவர்கள், ஆசிரியர்களை மாவட்ட கல்வி அலுவலகத்திலிருந்து அறிவுறுத்தியுள்ளனர்.

 

அரசு ஆன்லைனில் அறிவித்த நீட்தேர்வு பயிற்சி மையத்தை தவிர்த்துவிட்டு வேறு தனியார் பள்ளிக்கு மாற்றுவது அரசுப்பள்ளி மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பை குறைப்பதுடன், மாணவர்கள், பெற்றோருக்கு மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.  அரசு மேல்நிலைப்பள்ளியில் தரமான கட்டிடம், மின்வசதி,  இணைய வசதி, நவீன காணொலிக்காட்சி தொழில்நுட்ப வசதியுடன் கூடிய வகுப்பறைகள் உள்ள நிலையில் இங்கேயே நீட் தேர்வு பயிற்சி மையத்தை செயல்படுத்த உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியுள்ளார்.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன், நீதிபதி ஹேமலதா அமர்வு இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளி மாணவர்களுடன் தரையில் அமர்ந்து சத்துணவு சாப்பிட்ட கலெக்டர்

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
collector sat on the floor and ate the food with the school students

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் கிராமத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அங்குள்ள அரசு பள்ளிகள், மக்கள் நல வாழ்வு மையம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வீடு வீடாக சென்று பொது மக்களின் குறைகளை கேட்டு அறிந்தார்.

பொதுமக்கள் சாலை வசதி சரியில்லை, நல்ல குடிநீர் கிடைப்பதில்லை, சரியான நேரத்தில் குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. தெரு மின்விளக்கு சரியாக எரிவதில்லை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது குறித்து கோரிக்கை வைத்தனர். அதை எல்லாம் விரைவில் சரி செய்வதாக உறுதியளித்தார். அங்குள்ள மக்கள் நல வாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக வந்திருந்த பொது மக்களிடம் சிகிச்சை குறித்து கேட்டபோது, அங்கிருந்த கர்ப்பிணிப் பெண்களில் ஒருவர் கலெக்டரிடம் முறையான மருத்துவம் பார்க்கவில்லை என குற்றம்சாட்டினார்.

collector sat on the floor and ate the food with the school students

அங்கிருந்த மருத்துவ செவிலியர்களிடம் வருகை பதிவேடு வாங்கி பார்த்தார், நோயாளிகளுக்கு வழங்கும் சிகிச்சை குறித்த முறைகளை கேட்டறிந்து கண்டித்தார். பின்னர் அங்குள்ள அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் கல்வி குறித்து ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது பைரப்பள்ளி அரசு துவக்க பள்ளி உதவி ஆசிரியை ஜோதி மணியை சால்வை அணிவித்து பாராட்டினார்.

மிட்டாளம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுடன் தரையில் அமர்ந்து முட்டையுடன் கூடிய சத்துணவு சாப்பிட்டார். மாவட்ட ஆட்சியரிடம் அங்குள்ள இருளர் இன மக்கள், தங்கள் பிள்ளைகள் மேல்நிலைப் படிப்பு மற்றும் பட்டப் படிப்பு படிக்க வசதி இல்லாமல் இருக்கிறோம், எங்கள் பிள்ளைகளுக்கு  கல்வி உதவித்தொகை வழங்கவேண்டும், இருக்க சொந்தமாக வீடு இல்லாமல் புறம்போக்கு இடத்தில் குடிசை போட்டு தங்கியுள்ளோம். அந்த வீடுகளில் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. வீடு கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அவைகள் செய்து தர நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி வழங்கினார்.

Next Story

17 ஆம் நூற்றாண்டு சிவபக்தரின் கல்வெட்டைக் கண்டுபிடித்த மாணவர்கள்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Students discover 17th century inscription of Shiva devotee

சேலம் மாவட்டம், மேட்டுர் வட்டம், மேச்சேரி அருகே மாதநாயக்கன்பட்டியில் உள்ள பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியின் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர் சந்திரசேகரன். மன்றத்தில் பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் உள்ளனர்.

இப்பள்ளியில் இருந்து 2 கி.மீ தொலைவில் ஒரு வயலில் பாறையில் ஒரு கல்வெட்டு இருப்பதாக பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணம் சென்று ஆய்வு செய்துள்ளனர்.

இது குறித்து தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் கூறும் போது, பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில் மாணவர்களுடன் களப்பயணம் செய்து பார்த்த போது வயல்வெளியில் சிறிய பாறையில் அந்த கல்வெட்டு காணப்பட்டது எழுத்துகளைப் பார்த்த போது அது 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் கல்வெட்டு என்பதை அறிய முடிந்தது. 

Students discover 17th century inscription of Shiva devotee

தொடர்ந்து ஆசிரியர் அன்பரசி, கல்வெட்டுப்படி எடுத்து ஆய்வு செய்து பார்த்த போது 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் கல்வெட்டு அமைந்துள்ள பாறை 3 அடி நீளமும் , 2.5 அடி அகலமும் உடையது. 3 வரிகள் எழுதப்பட்டிருந்தது. அந்த கருங்கல் பாறையில் சூலம் போன்ற அமைப்பும், அதன் அருகில் மூன்று வரியில் 1.ஸ்ரீ கயிலா, 2. ய நா, 3. தர் என்ற வாசகம் அதாவது ‘கயிலாயநாதர்’ என்ற முழு வாசகம் தெரியவந்துள்ளது. 

யாரோ சிவபக்தர் இந்த பாறையில் கல்வெட்டாக எழுதி இருக்கலாம் என்பது தெரிகிறது. தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் அதனால் தான் மாணவர்களையும் களப்பயணமாக அழைத்து வந்தோம் என்றார்.