Skip to main content

காரைக்காலில் விஷம் கொடுத்து சிறுவன் கொலை; வழக்கில் புதிய திருப்பம் 

Published on 06/09/2022 | Edited on 06/09/2022

 

Case of boy poisoning in Karaikal; A new twist

 

காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் ராணி. இவருடைய மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  அவர்கள் வீட்டிற்கு அருகே உள்ள சிறுவனும் அதே பள்ளியில் அந்த மாணவி உடன் ஒரே வகுப்பில் படித்து வருகிறார். மாணவியை விட மாணவன் மிகவும் திறம்பட படித்து வந்துள்ளார். தேர்வில் அந்த மாணவனே அதிக மதிப்பெண் எடுத்துவந்துள்ளார். இது மாணவியின் தாயாரான ராணிக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.

 

இதனால் தன்னுடைய மகள்  சிறுவனை விட குறைவான மதிப்பெண் எடுப்பதை விரும்பாத அவர், சிறுவனை அழைத்து விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். நண்பரின் தாயார் தானே என்று அவரும் விஷம் கலக்கப்பட்டிருப்பதை அறியாமல் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த சிறுவன் மயக்கமடையவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிறுவனை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் தற்போது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மாணவியின் தாயாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

முதலில் பள்ளி முடிந்து வீட்டுக்கு  வந்த மாணவனின் உடல் சோர்வாக இருந்ததால் வீட்டில் இருந்தோர் அவரை காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு இருந்த மருத்துவர்கள் சிறு மருந்துகளை கொடுத்து  மாணவரை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். இரவில் மீண்டும் மாணவர் சோர்வாக காணப்பட்டதால் மீண்டும் அதே மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்து சென்றனர். இதனிடையே மருத்துவமனையில் சேர்த்து கிட்டத்தட்ட 24 மணி நேரங்களுக்குள் சிறுவன் உயிரிழந்துள்ளார். காவல் துறையினர் குற்றவாளியை கைது செய்தாலும் காரைக்கால் அரசு மருத்துவமனையின் அலட்சியப்போக்குதான் மாணவனின் மரணத்திற்கு காரணம் என சொல்லப்பட்டது.

 

பல்வேறு அமைப்புகள் வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் சிறுவன் மரணம் தொடர்பான முழு விபரத்தையும் கண்டறிய குழந்தைகள் நல மருத்துவர் முரளி தலைமையில் மூன்று  பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது புதுச்சேரி அரசு. மருத்துவக்குழு, மாணவன் சேர்க்கப்பட்ட மருத்துவமனைக்கு சென்று விசாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காரைக்காலில் மருத்துவர் செவிலியர் உள்ளிட்ட 30க்கும் அதிகமானோர் பணியில் இருந்தாலும் அவர்கள் புதுச்சேரியிலேயே பணிபுரிகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மாணவன் மரணம் தொடர்பான முழு விபரத்தையும் கண்டறிய மருத்துவக்குழு காரைக்கால் சென்றுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் விடுவிப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Tamil Nadu fishermen released from Sri Lankan jail

தமிழக மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய சூழலில் மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 19 மீனவர்கள் கடந்த மார்ச் 6 ஆம் தேதி (6.03.2024) மீன் பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர். இவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும், மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி கைது செய்தனர். அதோடு மீனவர்கள் பயன்படுத்திய 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதே சமயம் மீனவர்கள் 19 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மயிலாடுதுறையைச் சேர்ந்த 9 பேர், புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 பேர், புதுச்சேரி, காரைக்காலில் இருந்து 6 பேர் என மொத்தம் 19 மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அப்போது மீனவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்று, அரசின் சார்பில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். 

Next Story

“இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில்...” - கமல்ஹாசன் கண்டனம்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
kamal about pudhucherry child issue

புதுச்சேரி மாநிலம் சோலை நகர் பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி ஒருவர் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த சனிக்கிழமை வழக்கம் போல தெருவில் தனது நண்பர்களுடன் விளையாட சென்றார். ஆனால், சிறுமி மாலை ஆகியும் வீடு திரும்பாததால், சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடினர். சிறுமி காணாமல் போனது குறித்து முந்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். போலீசார் அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சிறுமியை தேடி வந்தனர். அதனடிப்படையில் நேற்று மதியம் அங்குள்ள அம்பேத்கர் நகர் சாக்கடை கால்வாயில் சந்தேகத்திற்கிடமாக மூட்டை ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் மூட்டையை கைப்பற்றிப் பிரித்து பார்த்த போது அதில் சிறுமி கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்தார்.

இந்த கொலையில் கஞ்சா குடிக்கும் இளைஞர்கள் சிறுமியின் கை கால்களை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ளனர் என சிறுமியின் தந்தை பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விசாரணையில் அந்த பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் அவனுக்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டபோது, சிறுமி மயங்கி விழுந்துள்ளதால் அவரை கொலை செய்து மூட்டை கட்டி சாக்கடையில் வீசி இருப்பது தெரியவந்தது. 

இந்தச் சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்கள் மூலம் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், எங்கே போகிறோம்? என்ற தலைப்பில் நிறைய சம்பவங்களின் மேற்கோள்காட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, “புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள். உலகின் பாதி நாடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணை ராஞ்சியில் ஒரு கும்பல் வன்புணர்வு செய்திருக்கிறது. மங்களூருவில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டுள்ளது. சென்னையில் காதல் திருமணம் செய்துகொண்ட பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் பெண்ணின் சகோதரனால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளான். குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. 

ஒரு சமூகமாக நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் எனும் ஆழமான ஐயத்தை இந்தச் சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன. ஒருபுறம் வளர்ச்சி, வல்லரசு, நல்லாட்சி என்று பெருமை பேசிக்கொண்டிருக்கிறோம். மறுபுறம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற, போதையின் பிடியில் சீரழிகிற, சாதி மத வெறி பிடித்தாட்டுகிற சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோம். மானுட நேயத்தைத் தொலைத்துவிட்டு மிருக நிலைக்குத் திரும்புவதை வளர்ச்சி என்று கருத முடியுமா? குற்றங்கள் எதுவாயினும், அதன் காரணிகள் எவையாக இருந்தாலும் எல்லாவற்றுக்குப் பின்னாலும் இருப்பது மனிதத்தன்மையை மரத்துப்போகச் செய்யும் போதைவஸ்துகள்தான். போதை வஸ்துகள் சகஜமாகப் புழங்கும் தேசத்தில் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பது நிதர்சனம். இந்தச் சீரழிவை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில் எதிர்காலம் நம்மை மன்னிக்காது. போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும். சமூகத்தைச் சீரழிக்கும் போதைக் கும்பலுக்கு எதிராக நம் எல்லோரது கரங்களும் இணையட்டும். போதையில்லா தேசத்திற்குப் பாதை போட ஒவ்வொருவரும் களமிறங்குவோம்” என குறிப்பிட்டுள்ளார்.