Skip to main content

ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 12/06/2024 | Edited on 12/06/2024
Case against Isha Foundation; High Court action order

கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள இக்கரை போளுவாம்பட்டியில் மின் தகன மேடை ஒன்று ஈஷா அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் தகன மேடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எஸ்.என். சுப்பிரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “மின் தகன மேடை அமைக்கப்பட்டுள்ள பகுதியானது குடியிருப்பு பகுதி ஆகும். இதனால் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படும். எனவே மின் தகன மேடையை அமைக்கக் கூடாது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (12.06.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது ஈஷா யோகா மையம் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “மனுதாரர் வசிக்கும் பகுதி குருட்டுப்பள்ளம் ஆகும். அப்பகுதியில் மனுதாரர் மட்டுமே உள்ளார். மனுதாரர் குறிப்பிட்டிருக்கும் முகவரியில் ஒரு மேற்கூரை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. அங்கு எந்த குடியிருப்பு வாசிகளும் இல்லை. மனுதாரர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். அவரது மனைவி அரசு ஊழியராக உள்ளார். இவர்கள் போலியான முகவரியைச் சமர்ப்பித்துள்ளனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள மின் தகன மேடையால் எந்தவொரு சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே உள் நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. 

Case against Isha Foundation; High Court action order

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், “மின் தகன மேடையால் அருகில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மின் தகன மேடை அமைக்கும் முன்பாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் ஆட்சேபனையைக் கேட்காமல் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. எனவே அந்த மின் தகன மேடையை அகற்ற உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார். அப்போது ஈஷா மையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் குறுக்கிட்டு வாதிடுகையில், “அந்தத் தகன மேடை இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. அங்கு நவீன முறையில் எல்.பி.ஜி. எரிவாயு மூலமாக உடல்கள் எரியூட்டப்படவுள்ளது. இதனால் சுற்றுச்சூழலுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது” என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “சம்பந்தப்பட்ட மின் தகன மேடையை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை வரும் 25 ஆம் தேதிக்கு (25.06.2024) ஒத்தி வைத்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘அதி கனமழை பெய்யும்’ - ரெட் அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
Heavy rain will fall Meteorological Center gave red alert

தமிழகத்தில் கடந்த மே, ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத்  தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக நீலகிரியில் கடந்த ஒரு சில தினங்களாக பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. அதன்படி குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து வருகிறது. சில இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று (19.07.2024) அதி கனமழை பெய்யக்கூடும். அதாவது 21 செ.மீ.க்கும் மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் ஓரிரு இடங்களில் இன்று 12 செ.மீ. முதல் 20 செ. மீ. வரை மிக கனமழை பெய்யக்கூடும். அதோடு திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோயம்புத்தூரில் நாளை (20.07.2024) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Heavy rain will fall Meteorological Center gave red alert

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 5 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கனமழை எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய 4 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (19.07.2024) ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

‘மக்களைக் குழப்பும் புதிய கிரிமினல் சட்டங்கள்’ - உயர்நீதிமன்றம் கருத்து!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
New laws that confuse people High Court opinion

இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றிற்கு பதிலாக மத்திய அரசு கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த 1 ஆம் தேதி (01.07.2024) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன.

அதே சமயம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்கள் ஏதுமின்றியும் மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்காமலும் அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டங்களின் பல்வேறு பிரிவுகளை எதிர்த்து நாடெங்கும் எதிர்ப்புகளும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.

New laws that confuse people High Court opinion

இதனையடுத்து புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “அமலுக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும்.  இந்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (19.07.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “அமலுக்கு வந்துள்ள புதிய கிரிமினல் சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. இந்த மூன்று சட்டங்களையும் அமல்படுத்தும் முன் சட்ட ஆணையத்தை ஆலோசித்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர். அதன் பின்னர் இது குறித்து மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.