Skip to main content

நீர்த்தேக்கத் தொட்டியில் நாய் சடலம் - ஒருவர் கைது

Published on 07/02/2023 | Edited on 07/02/2023

 

bb

 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே புதுக்கோட்டை என்ற கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நாய் சடலம் கிடந்ததது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழகத்தில் அண்மையில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் பட்டியலினத்தவர் வசிக்கும் பகுதியில் இருந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவுகள் இருந்தது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சிவகாசி அருகே புதுக்கோட்டை என்ற கிராமத்தில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நாய் சடலம் கிடந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

இது தொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவி காளீஸ்வரி கொடுத்த புகாரின் அடிப்படையில் எம்.புதுப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து இது தொடர்பாக நான்கு பேரிடம் இன்று காலையிலிருந்து விசாரணை நடத்தப்பட்டது. அதில், அதே ஊரைச் சேர்ந்த அய்யனார் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்தான் இறந்த நாயை மேலே கொண்டுசென்று தொட்டிக்குள் போட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

 

அய்யனார் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்த நாயை தூக்கிக்கொண்டு தண்ணீர் கொடுப்பதற்காக மேலே சென்றதாகவும், அப்பொழுது அந்த நாய் தவறி தொட்டிக்குள் விழுந்ததாகவும் அய்யனார் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்காளர்களுக்கு பணம்; கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Money for Voters BJP leader caught handed

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி நேற்று நள்ளிரவில் பூலுவப்பட்டியில் உள்ள தேநீர் கடையில் வார்டு வாரியாக ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதி மணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

இது குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் விநியோகம் செய்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.81 ஆயிரம் ரொக்கப்பணத்தையும், வாக்காளர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்துள்ளது. 

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.