Skip to main content

கட்டையன் யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர்

Published on 24/07/2023 | Edited on 24/07/2023

 

 Captivation of a Katayan elephant by anesthetic injection

 

சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைக்கிராமத்தில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய கட்டையன் என்கிற காட்டு யானை கடந்த ஒரு வருடமாக உணவுக்காக பூதிக்காடு, செங்காடு மூலக்கடம்பூர் தொண்டூர் கடம்பூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட வனத்தையொட்டிய விவசாய நிலங்களில் புகுந்து சோளம், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களைச் சேதப்படுத்தி வந்தது. மேலும், பயிர்களை நாசம் செய்து வரும் கட்டையன் யானையைப் பிடித்து வேறொரு பகுதியில் விட வேண்டும் எனவும் வனத்துறைக்கு விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் கோரிக்கையும் விடுத்து வந்தனர்.

 

இந்நிலையில், கடம்பூர் வனத்துறையினர் யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க முயற்சி மேற்கொண்டனர். 40 வயது மதிக்கத்தக்க காட்டு யானையைப் பிடிக்க மருத்துவக் குழுவும் வரவழைக்கப்பட்டது. அதேபோன்று காட்டு யானையைப் பிடித்து மற்றொரு வனப்பகுதியில் விடுவதற்கு வனத்துறை சார்பில் ஓசூர் பகுதியிலிருந்து லாரியும் வரவழைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவக் குழு மற்றும் கடம்பூர் வனச்சரக அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான வனத்துறையினர் இணைந்து யானை செல்லும் வழித் தடங்களைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். காட்டு யானை சமதளமான விவசாய நிலங்களை ஒட்டி வரும்போது மருத்துவக் குழுவினர் மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கத் தயார் நிலையிலிருந்தனர்.

 

இந்நிலையில், ஓசப்பாளையம் அடுத்த பெலுமுகை பகுதி விளைநிலங்களில், கட்டையன் யானை சுற்றித் திரிவதாக வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து வனத்துறை மற்றும்  கால்நடை மருத்துவக் குழுவினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வன மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர், கட்டையன் யானைக்கு 4 முறை மயக்க ஊசி செலுத்தினர். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு யானை மயக்கமடைந்த நிலையில் கிரேன் மூலம் கயிறு கட்டப்பட்ட ஹைட்ராலிக் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து பவானிசாகர் அடுத்த தெங்குமரஹாடா வனப்பகுதியில் மங்களப்பட்டி எனும் அடர்ந்த வனப்பகுதியில் கட்டையன் யானை விடப்பட்டது. தற்போது கட்டையன் யானை நலமுடன் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால் மலைப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவில் திருவிழாவில் யானைக்கு மதம்;பக்தர்கள் பதறி அடித்து ஓட்டம்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
elephant Angry in temple festival; Devotees panic and run

கோவில் திருவிழாவில் யானைக்கு மதம் பிடித்து பக்தர்கள் தெறித்து ஓடிய சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் பூரம் திருவிழா என்பது மிகவும் விமரிசையானது. கேரளப் பகுதிகளில் கோயில் திருவிழாக்களில் யானைகள் ஊர்வலம் நடைபெறுவது வாடிக்கையான ஒன்று. அண்மைக்காலமாகவே திருவிழாக்களில் பங்கேற்கும் யானைகளுக்கு மதம் பிடிப்பது உள்ளிட்ட செயல்களால் பதற்றம் ஏற்படுவது வழக்கம்.

இதன் காரணமாக கேரளாவில் திருவிழா நேரங்களில் யானை ஊர்வலம் நடக்கும் பகுதிகளில் யானை பாதுகாப்பு படையினர் என்ற அமைப்பு கண்காணிப்பிற்காக நிறுத்தப்படுகிறது. இந்த நிலையில் பாலக்காடு மாவட்டம் சாலச்சேரி முளையம்பரம்பத்துக்காவு என்ற கோவிலில் பூரம் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திருவிழாவில் பங்கேற்க அலங்காரம் செய்யப்பட்டு யானைகள் அணிவகுத்து வந்தன. அதில் ஒரு யானைக்கு திடீரென மதம் பிடித்தது. உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த யானை பாதுகாப்புப் படை வீரர்கள் பாகங்களோடு இணைந்து யானையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

திடீரென யானைக்கும் மதம் பிடித்ததால் அந்தப் பகுதி இருந்த மக்கள் தலைதெறித்து ஓடினர். இந்த சம்பவத்தில் பொது மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் யானையானது மீட்கப்பட்டு அந்த இடத்திலிருந்து அழைத்து செல்லப்பட்டது.

Next Story

யானைப் பாகன் உயிரிழப்பில் மர்மம்; கண்ணீருடன் முதல்வரின் தனிப்பிரிவில் மனு

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Mystery in elephant Bagan ; Petitioner's wife in a separate division of the Chief

பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் யானைகள் முகாமில் பணிபுரிந்த தன்னுடைய கணவர் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாகத் தமிழக முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், 'பொள்ளாச்சி தாலுகா டாப்ஸ்லிப் கோழிகமுத்தி செட்டில்மெண்ட் யானைகள் முகாமில் 15 வருடங்களாக யானை பாகனாகப் பணியாற்றி வந்த (R. மஞ்சு) எனது கணவர் S. ராஜ்குமாரை கடந்த டிசம்பர் மாதம் 2ம் தேதி அன்று, அவருடன் பணியாற்றி வந்த மற்றொரு யானை பாகன் சந்திரன் என்பவர் 'வனத்துறை அதிகாரி வர சொன்னார்' என  காலை 10 மணி அளவில், வீட்டிலிருந்து அழைத்துச் சென்றார்.

சந்திரன் என்பவருடன் சென்ற எனது கணவர் ராஜ்குமார், மூன்று நாட்களாக வீடு திரும்பவில்லை. டிசம்பர் மாதம் 5ம் தேதி மாயத்துரை என்ற வனத்துறை அதிகாரி, எனது மாமியார் தங்கம் அவர்களுக்கு தொலைபேசி மூலம், உங்களது மகன் ராஜ்குமார் சேத்துமடை செக்போஸ்டில் இருக்கிறார். வாருங்கள் என்று தொலைபேசி மூலம் தகவல் கொடுத்ததின் பேரில் நாங்கள் அங்கு விரைந்து சென்றோம். நாங்கள் அங்கு சென்று பார்த்தபோது, சேத்துமடை செக் போஸ்ட்டிற்கு அரை கிலோ மீட்டர் தூரத்தில், ஆர்.டி.ஓ. மற்றும் வனத்துறை அதிகாரிகள், ஆம்புலன்ஸ், திரளான பொதுமக்கள் அங்கு திரண்டு இருந்தனர். இவர்களை எல்லாம் பார்த்தபொழுது எங்களுக்கு மிகவும் பயம் வந்துவிட்டது. அதன் பிறகு என்னுடைய கணவர் ராஜ்குமார் மர்மமான முறையில், அழுகிய நிலையில் அங்கு பிணமாக கிடந்தார்.

பிறகு உடலை அங்கிருந்து போஸ்ட்மார்ட்டம் செய்வதற்கு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். எங்களுக்கு தெரிந்த சிலரிடம் விசாரித்தபோது, டாப் ஸ்லிப்பில் இருந்து, வேனில் சந்திரன், விஜயன், அருண், வெங்கடேசன் ஆகிய நால்வரும் தான் உன் கணவர் ராஜ்குமாரை அழைத்துச் சென்றனர் என்று கூறினர். ஆனால் காவல்துறை அவர்களை விசாரணை செய்ததாக தெரியவில்லை.

எனவே நாங்கள் ஆனைமலை காவல் நிலையத்தில் என் கணவர் ராஜ்குமார் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று புகார் தெரிவித்தோம். புகாரின் அடிப்படையில் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சென்னையில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவில், எங்களுக்கு நியாயமான முறையில், விசாரணை செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து நீதியை நிலை நிறுத்த வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.