Skip to main content

ஓட்டுநருக்கு நேர்ந்த துயரம்; பள்ளியில் புகுந்த அரசுப் பேருந்து

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

 bus crashed into the school as the driver suddenly suffered a heart attack

 

திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து இன்று காலை 7:00 மணி அளவில் புறப்பட்ட அரசு நகரப் பேருந்தானது தீரன் நகர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது ஆர்.சி. மேல்நிலைப் பள்ளியின் அருகில் பேருந்து வந்தபோது, அதை ஓட்டி வந்த மணப்பாறையைச் சேர்ந்த கணபதி (56) என்ற ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நிலைகுலைந்த ஓட்டுநர் பேருந்தை நிறுத்த முடியாமல் மயங்கிய நிலையில், பேருந்து பள்ளியின் நுழைவாயில் அருகே அமைந்துள்ள டெலிபோன் கம்பத்தின் மீது மோதி அருகில் இருந்த கடைக்குள் புகுந்தது.    

 

இதனை அடுத்து பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் அலறி அடித்து இறங்கி ஓடினர். மேலும் மயங்கி விழுந்த ஓட்டுநரை மீட்ட பயணிகள் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த கண்டோன்மென்ட் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளத்தில் கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்கள் கவனத்திற்கு!

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Those who lost their education certificates in the flood, attention

மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னை மாவட்டத்திலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சேர்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

அதே சமயம் இந்த மழை, வெள்ள பாதிப்பினால், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகச் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகள் தங்கள் சான்றிதழ்களின் நகல்களைக் கட்டணமின்றி பெறுவதற்கு ஏதுவாக www.mycertificates.in என்ற இணையதளம் உயர் கல்வித்துறையால் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே மாணவ - மாணவிகள் தங்களின் இழந்த சான்றிதழ் பற்றிய விபரங்களை இணையதளம் வாயிலாக இன்றிலிருந்து (11.12.2023) பதிவு செய்யலாம். மாணவ, மாணவிகள் இணையதளம் வாயிலாகச் சான்றிதழ்களின் விபரங்களைப் பதிவு செய்த பின் அவர்களது மின்னஞ்சலுக்கு ஒப்புகை (Acknowledgement) அனுப்பப்படும்.

இவ்வாறு பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திலிருந்து பெறப்பட்டு, மாணவர்களுக்கு சென்னையில் வழங்கப்படும். மேலும், இணையதளத்தில் பதிவு செய்வது குறித்த சந்தேகங்களுக்கு தெளிவுபெற தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் செயல்படும் கட்டணமில்லா அழைப்பு மையத்தை 1800-425-0110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என உயர் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பிரணவ் ஜுவல்லரி உரிமையாளருக்கு போலீஸ் காவல்!

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Pranav Jewelery owner police custody

திருச்சியைத் தலைமை இடமாகக் கொண்டு சென்னை, ஈரோடு, நாகர்கோவில், மதுரை, கும்பகோணம், பாண்டிச்சேரி உள்ளிட்ட 7 இடங்களில் பிரணவ் ஜுவல்லரி கடை செயல்பட்டு வந்தது. நகை விற்பனையுடன் செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை என நிர்வாகம் கொடுத்த விளம்பரத்தைப் பார்த்த பலரும் லட்சங்களில் முதலீடு செய்தனர். 5 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 2 சதவீத வட்டி வீதம் என மாதம் தோறும் 10000 ரூபாய், பத்து மாத முடிவில் செய்கூலி, சேதாரம் இல்லாமல் 106 கிராம் தங்கம் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் என்ற கவர்ச்சி அறிவிப்பை நம்பி பலரும் 5 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருந்தனர்.

இந்தச் சூழலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட காசோலைகள் பணமில்லாத காரணத்தால் திரும்பி வந்துள்ளன. இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு ஓரிரு வாரங்களில் பணம் செட்டில் செய்வதாக ஜுவல்லரி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இருப்பினும் உரிய பணம் சென்று சேராததால் முதலீடு செய்தவர்கள் மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து மோசடி புகாரில் பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர்களான மதன் செல்வராஜ், அவரது மனைவி கார்த்திகா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இருவரையும் தேடியும் வந்தனர். இந்த சூழலில் நகை சேமிப்பு மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர்களில் ஒருவரான மதன் செல்வராஜ் மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார். இதனையடுத்து இவரை டிசம்பர் 21 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி ஜோதி உத்தரவிட்டிருந்தார்.

அதே சமயம் பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜ், அவரது மனைவி கார்த்திகா ஆகியோர் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனையடுத்து இந்த மனு கடந்த 8 ஆம் தேதி (08.12.2023) விசாரணைக்கு வந்தது. அப்போது, “பிரணவ் ஜுவல்லரி நிறுவனம் 100 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளது. இது குறித்து 1,900க்கும் மேற்பட்டோர் புகார்கள் கொடுத்துள்ளனர். மதன் செல்வராஜ் ஏற்கனவே நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், அவரது மனைவி கார்த்திகா தலைமறைவாக உள்ளார்” என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதி பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர்களான மதன் செல்வராஜ், கார்த்திகா ஆகியோரின் முன் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், பிரணவ் ஜுவல்லரி மோசடி வழக்கில் பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜை 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க மதுரை சிறப்பு நீதிமன்றம் நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.