Skip to main content

மக்கள் கட்டிய பாலமும் அடித்து சென்றது - மூங்கில் கட்டி கடக்கும் அவலம்!

 

விருத்தாசலம் அருகே ஆற்றின் குறுக்கே பொதுமக்கள் கட்டிய தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், மூங்கில் பாலம் அமைத்து கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள தே.பவழங்குடி - ஓட்டிமேடு கிராமத்திற்கும் இடையே மணிமுக்தாறு செல்கிறது. இந்த ஆற்றை கடந்து தான்,  பள்ளி மாணவர்கள் ஓட்டிமேடு கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சென்று கல்வி பயின்று வருகின்றனர். மேலும் ஓட்டிமேடு, பெருந்துறை, கோட்டிமுளை உள்ளிட்ட கிராமங்களில் விளையும் விவசாய விளை பொருட்களை இந்த ஆற்றைக் கடந்து சென்று தான்,  ஸ்ரீமுஷ்ணம், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, விவசாயிகள் கொண்டு சென்று வியாபாரம் செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில் மழைக்காலங்களில் மணிமுக்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றைக் கடக்க முடியாத சூழல் ஏற்பட்டதால் அரசிடம்   பாலம் அமைக்கக்கோரி பலமுறை பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில், பாலம் கட்டித்தர மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் முன்வராததால் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து இரண்டு லட்சம் செலவில்,  ஓட்டிமேடு - பவழங்குடி கிராமங்களுக்கு இடையே உள்ள மணிமுக்தாற்றில் தரைப்பாலம் அமைத்தனர். ஆனால் தற்போது பெய்து வரும் கனமழையால் மணிமுக்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பொதுமக்கள் கட்டிய தரைப்பாலம் வெள்ளத்தில்,  அடித்துச் செல்லப்பட்டதால் பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாயிகள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

 

இதனால் கிராம மக்கள்,  பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் விவசாயிகள் செல்வதற்காக இளைஞர்கள் ஒன்றிணைந்து மூங்கில் பாலம் அமைத்துள்ளனர். தமிழக அரசு உடனடியாக இரு கிராமங்கள் இடையே பாலம் அமைத்து தர வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !