Breaking the temple lock near Pennadam and stealing the idol and goddess thali!

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகேயுள்ள இறையூரில் ஸ்ரீதேவி பூதேவி உடனுறை அருள்மிகு அழகிய மணவாளப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் தர்மகர்த்தாவாக இருந்து கோயிலைக் கவனித்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில் நேற்றுமுன்தினம் (04.02.2021) கோயிலில் அனைத்துப் பூஜைகளையும் முடித்து இரவு கோயிலைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்று விட்டார். நேற்று (05.02.2021) காலை, கோயிலைத் திறப்பதற்கு வந்துள்ளார். அப்போது கோயில் கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டு, கோயில் திறந்து கிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். அதனைத் தொடர்ந்து அப்பகுதி முக்கியஸ்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு தகவல் அளித்துள்ளார். தொடர்ந்து பொதுமக்களுடன் சேர்ந்து கோயில் உள்ளே சென்று பார்த்தபோது, கோயிலுக்குள் இருந்த 2 அடி உயரமுள்ள ஐம்பொன்னாலான ஆஞ்சநேயர் சிலை, பெருமாள் நெற்றியில் இருந்த கால் கிலோ எடைகொண்ட வெள்ளியிலான நாமம், மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த 4 தாலிகள் (2 பவுன்) ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. திருடுபோன ஐம்பொன் சிலை, பல லட்சங்கள் மதிப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து பெண்ணாடம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்ததன் பேரில் அங்கு விரைந்து சென்ற பெண்ணாடம் போலீசார், திருட்டுச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்து, அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயிலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கடந்த 6 மாத காலத்தில் பெண்ணாடம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கோயில்களில் இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. மாவட்டக் காவல்துறை நிர்வாகம் இதற்கு தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.