
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் உருவாகி வரும் 'வலிமை' திரைப்படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்கிறார். வில்லனாக கார்த்திகேயா நடிக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய நிறைவடைந்துள்ள நிலையில், ஒரேயொரு கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி மட்டும் எஞ்சியுள்ளது. தற்போதைய கரோனா பரவல் நிலைமையைக் கவனத்தில் எடுத்துள்ள படக்குழு, எஞ்சியுள்ள படப்பிடிப்பையும் இந்தியாவிலேயே நடத்தி படப்பிடிப்பை நிறைவு செய்துவிடலாமா என்ற யோசனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
வலிமை படத்திற்கான பின்னணி இசை உள்ளிட்ட இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்ற நிலையில், அஜித்தின் பிறந்தநாளான மே 1-ஆம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் கரோனா பரவல் காரணமாக 'வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டை ஒத்தி வைத்துள்ளதாக தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்துள்ளார்.