Skip to main content

'உடல் மினுமினுக்க...' வாட்ஸ்அப் குறுஞ்செய்தியை நம்பி வைத்தியம் மேற்கொண்ட இளைஞர் உயிரிழப்பு

Published on 13/11/2022 | Edited on 13/11/2022

 

 'Body Shimmering...' youth who received medical treatment on the basis of a WhatsApp text message

 

சமூக வலைத்தளத்தில் வந்த வைத்திய தகவலை நம்பி அதனை மேற்கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் திருப்பத்தூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள மின்னூர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். நாற்றாம்பள்ளியைச் சேர்ந்தவர் ரத்தினம். இவர்கள் இருவரும் தனியார் கல்குவாரியில் கூலித் தொழிலாளர்களாக வேலைபார்த்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் இவர்களுடைய வாட்ஸ் அப்பில் சித்த மருத்துவம் தொடர்பான ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் உடல் மினுமினுக்க வேண்டும் என்றால் செங்காந்தள் கிழங்கை சாப்பிட்டால் போதும் என சித்த மருத்துவ குறிப்பு வந்துள்ளது. இதனைப் பார்த்த இருவரும் செங்காந்தள் செடியை எடுத்து சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

 

ஆனால் சாப்பிட்ட சில மணி நேரத்திலேயே வாயிலும், வயிற்றிலும் எரிச்சல் ஏற்பட்ட நிலையில் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு இருவரும் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு வேலூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அதன்பிறகு அங்கிருந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு லோகநாதன் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த லோகநாதன் சிகிச்சை பலனின்றி இறுதியில் உயிரிழந்தார். ரத்தினத்திற்கு வேலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. சமூக வலைத்தளத்தில் வந்த குறுஞ்செய்தி நம்பி மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறாமல் தாங்களாகவே வைத்தியம் மேற்கொண்டு ஒருவர் பலியான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்