
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தேர் மற்றும் தரிசன விழாவின்போது தமிழக அரசின் அரசாணையை மீறி கோவில் தீட்சிதர்கள் கனக சபையில் பக்தர்கள் ஏறி வழிபடத் தடை விதித்து பதாகை வைத்தனர். இதற்குப் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அகற்றச் சென்ற இந்து சமய அறநிலையத்துறையினரைக் கோவில் தீட்சிதர்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து பலத்த காவல்துறை பாதுகாப்பில் அந்தப் பதாகை அகற்றப்பட்டது. பின்னர் ஜூன் 24 ஆம் தேதி மாலை கனக சபையில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் எனக் காவல்துறையினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் கோவில் தீட்சிதர்களிடம் வலியுறுத்தியபோது அவர்கள் அனுமதிக்க முடியாது எனப் பிடிவாதமாக இருந்தனர்.
இந்நிலையில் கனகசபையின் கிழக்கு வாயில் வழியாக இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் காவல்துறை பாதுகாப்புடன் தரிசனம் செய்துவிட்டு கீழே வந்தனர். இதற்குத் தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோவில் நகையைத் திருட வந்தார்கள் எனக் கூச்சலிட்டனர். மேலும் தீட்சிதர் பூணூலை அறுத்ததாகவும் தாக்கியதாகவும் பொய்யான குற்றச்சாட்டைக் கூறினார்கள்.
இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா என்பவர் கோவில் தீட்சிதர்களைக் காவல்துறையினர் தாக்கியதாகப் போலியான செய்தியைச் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். இது இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படும் வகையில் அவதூறு பரப்பியதாக சிதம்பரம் காவல்துறையினர் சூர்யா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தேடி வந்தனர்.
இதற்குப் பயந்து தலைமறைவாக இருந்த பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி. சூர்யா உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையுடன் முன்ஜாமீன் பெற்றுள்ளார். இதில் மறு உத்தரவு வரும் வரை, காலை மற்றும் மாலை சிதம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர் ஏற்கனவே சு. வெங்கடேசன் எம்பி மீது அவதூறு பரப்பிய வழக்கில் கையெழுத்திட்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.