Skip to main content

பா.ஜ.க நிர்வாகி வெட்டிக் கொலை; கல்வீச்சு, பைக்குகள் எரிப்பு, சாலை மறியல்... பதற்றத்தில் திருச்செந்தூர்!

Published on 04/11/2020 | Edited on 04/11/2020

 

BJP member passes away in thiruchendur

 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பக்கம் உள்ள தெற்குக் கோட்டூரைச் சேர்ந்தவர் ராமையாதாஸ் (50). அண்மையில் தான் தி.மு.க.விலிருந்து பா.ஜ.க.வுக்கு வந்தவர். அக்கட்சியின் அமைப்புச் சாரா பிரிவின் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருப்பவர். தென் திருப்பேரையைச் சேர்ந்த மாரியின் மகன் இசக்கியின் ஆடுகள், கடந்த வாரம் ராமையாதாசின் உளுந்து பயிரிட்ட வயலில் மேய்ந்துள்ளன. இதனால், ஆத்திரமான ராமையாதாஸ் இதனைக் கண்டித்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது முன் விரோதமாக மாறியிருக்கிறது.
 

இந்த நிலையில், நேற்று ராமையாதாஸ் தென்திருப்பேரையிலுள்ள டீ கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு பைக்கில் வந்த இசக்கி, தான் வைத்திருந்த அரிவாளால் ராமையாதாசை வெட்டியிருக்கிறார். நிலைகுலைந்த ராமையாதாஸ், தப்பி ஓடுகையில் அவரைத் துரத்திச் சென்ற இசக்கி, அவரை மறித்து தலை, கழுத்து போன்ற இடங்களில் சரமாரியாக வெட்ட, ரத்த வெள்ளத்தில் கதறிய ராமையாதாஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். வெட்டிய இசக்கி, தன் பைக்கைப் போட்டுவிட்டுத் தப்பியோடினார். சம்பவம் காரணமாக ஏற்பட்ட பதற்றத்தால் நகரத்தில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன.
 

BJP member passes away in thiruchendur


தகவலறிந்த சரக டிஐ.ஜி பிரவீன்குமார் அபிநவ், எஸ்.பி.ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தியதுடன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.


கொலையால் ஆத்திரமானவர்கள் எதிர் தரப்பினருக்குச் சொந்தமான இரண்டு பைக்குகள், வைக்கோல் படப்பையும் தீ வைத்துக் கொளுத்தியதோடு அந்தப் பகுதியிலுள்ள வீடுகளைத் கல் வீசித் தாக்கியதால் பதற்றம் அதிகரித்தது. கொலையாளிகளைக் கைது செய்யக் கோரி திருச்செந்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டதால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

 

cnc


அவர்களிடம் எஸ்.பி.ஜெயக்குமார், ஆர்.டி.ஓ தனப்பிரியா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். சமரசம் ஏற்படாமல் மறியல் தொடர்ந்து நீடிக்க, அதன் பின், "கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும். உயிரிழந்தவர் குடும்பத்தில் இருவருக்கு அரசு வேலை தர வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அதிகாரிகளால் ஏற்கப்பட்ட பிறகே, போராட்டத்தைக் கைவிட்டனர். பிரேதப் பரிசேரதனை செய்யப்பட்ட ராமையாதாசின் உடலைப் பெற்று இறுதிச் சடங்கு நடத்தி அடக்கம் செய்தனர். சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.


அரசியல் கட்சியின் பொறுப்பாளர் படு கொலையைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுவதால், பாதுகாப்பிற்காகப் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்செந்தூரில் கொட்டித்தீர்த்த மழை

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
 Heavy rain in Tiruchendur

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன்தினம் (16-12-23) இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வரலாறு காணாத அதி கன மழைப்பொழிவை ஏற்படுத்திய வளிமண்டல சுழற்சி தற்பொழுது விலகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் படிப்படியாக மழை குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தின் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி காயல்பட்டினத்தில் 21 சென்டிமீட்டர் மழை இன்று பதிவாகியுள்ளது. நேற்று 95 சென்டி மீட்டர் மழை காயல்பட்டினத்தில் பதிவாகிய நிலையில் இன்று 21 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடியில் அதிகபட்சமாக திருச்செந்தூரில் 23.1 சென்டி மீட்டர் மழையும், குலசேகரப்பட்டினம் 18.4 சென்டி மீட்டர், ஸ்ரீவைகுண்டம் 17.4 சென்டி மீட்டர், சாத்தான்குளம் 15.6  சென்டி மீட்டர் தூத்துக்குடி 13.7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Next Story

தொடர் கனமழை; 1000க்கும் மேற்பட்ட ரயில் பயணிகள் அவதி

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
Continuous heavy rain; More than 1000 train passengers suffered

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன்தினம் (16-12-23) இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டும், மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டும் வருகின்றன. மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கான அவசர உதவிகளுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, தென் மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாகத் தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும், மீட்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து நேற்று சென்னை எழும்பூருக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுள்ளது. அதே சமயம் தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால், தண்டவாளம் சேதம் காரணமாக செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு முதல் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ரயிலில் இருக்கும் 1000க்கும் மேற்பட்ட பயணிகள் உணவு, குடிநீர் இன்றி அவதியடைந்துள்ளனர். அரசு அதிகாரிகள் தங்களை உடனடியாக மீட்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் ரயிலில் உள்ள பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக ரயில்வே தரப்பில் இருந்தும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.