Skip to main content

பாஜகவும், அதிமுகவும் சேர்ந்து கூட்டுக் கொள்ளை: மு.க.ஸ்டாலின்

Published on 23/04/2018 | Edited on 23/04/2018


பாஜகவும், அதிமுகவும் சேர்ந்து கூட்டுக் கொள்ளையை, கூட்டுச்சதியை இரட்டை குழல் துப்பாக்கிகளாக சேர்ந்து செய்திருக்கிறார்கள் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது,

செய்தியாளர்: அதிமுகவும், பாஜகவும் இரட்டை குழல் துப்பாக்கி போல செயல்படுவதாக அதிமுக நாளேட்டில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறதே?

ஸ்டாலின்: அவர்கள் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படுவது உண்மைதான். ஆனால், எந்தவகையில் என்று கேட்டால், ஏழை – எளிய, கிராமப்புற மக்கள் மருத்துவக் கல்வியை பெற முடியாத வகையில் நீட் தேர்வை கொண்டு வந்து அற்புதமான காரியத்தை செய்வதில் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்பட்டு இருக்கிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், அதை அமைக்க முடியாது என மத்திய அரசு பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு ஒத்து ஊதுகின்ற, அடிமைத்தனமாக நடக்கும் அதிமுக ஆட்சி இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இந்த ஆட்சியில் அடித்துக் கொண்டிருக்கின்ற கொள்ளைகளுக்கு, ஊழல்களுக்கு, கலெக்‌ஷன், கமிஷன் கரப்ஷன் ஆகியவற்றுக்கு மத்திய அரசு துணையாக இருந்து இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படுகிறது. வருமான வரித்துறை சோதனைகள் நடந்து முடிந்தும், ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பிஜேபியும், அதிமுகவும் சேர்ந்து கூட்டுக் கொள்ளையை, கூட்டுச்சதியை இரட்டை குழல் துப்பாக்கிகளாக சேர்ந்து செய்திருக்கிறார்கள். எனவே, அவர்கள் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படுவதாக தெரிவித்து இருப்பது நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மைதான்.

செய்தியாளர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று அரசு சார்பில் கடிதம் எழுதியிருக்கிறார்களே?

ஸ்டாலின்: அது ஒரு நாடகம். முதலமைச்சர் தலைமையில் அனைத்து கட்சிகளின் தலைவர்களையும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமரை சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவதாக, அனைத்து கட்சி கூட்டம் நடத்தி நிறைவேற்றிய தீர்மானம் என்னவானது? அதை கேட்க, வலியுறுத்த இவர்களுக்கு துப்பில்லை. ஆனால், தங்களுடைய பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக பிரதமரை சந்திக்கிறார்கள். இப்போது கூட ஒருவேளை பதவிகளை காப்பாற்றவே கடிதம் எழுதியிருப்பார்கள் என்று கருதுகிறேன்.

செய்தியாளர்: பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டு வரப்பட்டு 25 ஆண்டுகள் ஆகியிருக்கின்ற நிலையில் அதன் நிலை என்ன?

ஸ்டாலின்: பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை கொண்டு வந்து, முதன் முதலாக பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது திமுக ஆட்சியின் போதுதான். பல ஆண்டுகளாக நடத்த முடியாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தலை நடத்தியதும் திமுகதான். உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி சாதனைகள் படைத்ததும், மத்திய அரசு உள்ளாட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்த நிதிகளை முழுமையாக பயன்படுத்தி பல திட்டங்களை உருவாக்கினோம். ஆனால், இன்றைக்கு இருக்கின்ற ஆட்சி உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் படுதோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தின் காரணமாக, தேர்தலையே நடத்த முன்வராமல் இருக்கிறது. மத்திய அரசு இதற்காக ஒதுக்கிய நிதி எல்லாம் பயன்படுத்தப்படாமல், திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்