Skip to main content

"அதெல்லாம் சும்மா உக்காந்துருக்கவங்க பேசுற பேச்சு..." - சேரன் அதிரடி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ் -3' நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பல சர்ச்சைகளை கடந்து 90 நாட்களுக்கும் மேல் பிக்பாஸ் வீட்டில் இருந்த இயக்குனர் சேரன் வெளியே வந்து  தனது சீடர் பாண்டிராஜ் இயக்கிய 'நம்ம வீட்டுப் பிள்ளை' படம் பார்த்துள்ளார். சென்னை கமலா திரையரங்க நிர்வாகம் அவரை வரவேற்று கேக் வெட்டச் செய்து மகிழ்வித்தது. இதைத் தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய சேரன் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்...
 

big boss cheran speech

 

"நான் படம் பார்க்கதான் இங்கே வந்தேன். இந்த ஏற்பாடு நடந்திருக்கும் என்று எனக்குத் தெரியாது. எனக்கு இந்த ஏற்பாடு செய்த கமலா திரையரங்கு உரிமையாளருக்கு நன்றி. நான் பிக் பாஸ் ஷோவில் பங்கேற்றதை 90 நாட்கள் பார்த்து அங்கு இருந்து வந்ததை அவர்கள் கொண்டாடினர். எனக்கு இது பெரிய சந்தோசத்தை கொடுத்தது. தர்ஷன் பிக் பாஸ்சில் இருந்து வெளியேறியது வருத்தம். அவர் அந்தப் போட்டியில் வெற்றி பெற தகுதியான மனிதர். ஆனாலும் மக்கள் நினைக்கிறதுதான் நடக்கும். மக்கள் அவருக்கு வோட் பண்ணலையென்றால் ஏதோ ஒரு குறை இருந்திருக்கலாம். எனக்கு பிக்பாஸ் அனுபவங்கள் ரொம்பவே சுவாரஸ்யமா இருந்தது. நான் எனக்குப் பிடித்துதான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் போனேன். கலைஞர்கள் பொதுவாகவே ஒரு அனுபவத்துக்காக அவ்வப்போது தங்களை ரெகுலர் வாழ்க்கையிலிருந்து வெளியே எடுத்துக்கொண்டு பயணம் செல்வார்கள். சிலரெல்லாம் இமய மலைக்கு செல்வது போல நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் போனேன். அங்கு செல்போன் இல்லாமல், பணம் இல்லாமல், அவர்கள் கொடுத்த பொருள்களை வைத்து சமையல் செய்து சாப்பிட்டு வாழ்ந்ததை நம் முன்னோர்கள் வாழ்ந்தது போல் உணர்ந்தேன்.

சில நண்பர்கள் எனக்கு சரியான மரியாதை கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டிருக்கிறார்கள். எனக்குக் கிடைத்த மரியாதை பற்றி 90 நாட்கள் காண்பிச்சாச்சு. மரியாதை கிடைத்ததையும் காமிச்சிட்டாங்க, கிடைக்காததையும் காமிச்சிட்டாங்க. மற்ற இயக்குனர்கள் என் மேல் உள்ள அன்பின் காரணமா அந்த பேட்டிகள் கொடுத்திருப்பாங்க. எனக்கு நேர்ந்தது அவமரியாதை கிடையாது. அது அந்த சூழலில் அவர்கள் என்னை புரிஞ்சிகிட்ட விதம். போகப் போக என்னை மிகவும் மரியாதையாக நடத்தினார்கள். பிக்பாஸ் கண்டிப்பா ஸ்கிரிப்டட் கிடையாது. எங்களுக்கு ஏதாவது வேண்டும் என்றால் மட்டும் ஒரு பேப்பரில் எழுதித் தருவோம். எங்களை கட்டுப்படுத்த ஒரே ஒரு குரல்தான் இருக்கும், அது பிக்பாஸின் குரல். அதுவும் எங்களுக்கு சில டாஸ்க்கள் பற்றி சொல்லத்தான் வரும். கண்டிப்பாக பிக் பாஸ் ஸ்கிரிப்டட் கிடையாது". 


தொடர்ந்து 'பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெளியே வந்தவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்று சொல்கிறார்களே?' என்று ஒரு செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, "அதெல்லாம் சும்மா உக்காந்துருக்கவங்க பொழுது போகாம பேசுற பேச்சு. அதுக்கெல்லாம் காது கொடுக்கக்கூடாது. நாம ஓட வேண்டியிருக்கு. என் குடும்பத்தை காப்பாத்த நான் ஓடணும், உங்க குடும்பத்தை காப்பாத்த நீங்க ஓடணும். அதுனால இந்த மாதிரி விஷயங்களுக்கெல்லாம் காது கொடுக்காம ஓடுவோம்" என்று அதிரடியாகக் கூறி முடித்துக்கொண்டார்.   

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்