/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/727_2.jpg)
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தைச் சேர்ந்த மிளகாய் வியாபாரி பழனியப்பன். இவரது மகன் பாஸ்கரன் (58). 1990 முதல் கடந்த வாரம் வரை ஏழை எளிய மக்களுக்காகவே மருத்துவச் சேவை செய்து ஏழைகளின் கடவுளாகக் காணப்பட்டவர். இன்று மருத்துவர் பாஸ்கரன் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் ஆயிரக்கணக்கான மக்களை கண்ணீரோடுகதற வைத்துள்ளது.
அவரைப் பற்றிக் கூறும்போது,நடுத்தரகுடும்பத்தில் பிறந்த பாஸ்கரன் கீரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தான் 1982-83 ல் +2 படிப்பை முடித்தார். பள்ளியில் படிக்கும்போதே தான் மருத்துவராகி ஏழை எளிய மக்களுக்கு மருத்துவம் செய்ய வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டிருந்தார். தனது லட்சியத்தை சக மாணவர்களிடம் சொல்லும் போது நண்பர்களின் ஊக்கம் அவரை மேலும் ஊக்கப்படுத்தியது. பள்ளிப் படிப்பு முடித்த நிலையில் அவர் நினைத்தது போலவே மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது.
மருத்துவக் கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு சொந்த ஊருக்கு வந்து தனது வீட்டிலேயே தனது லட்சியமான மருத்துவ சேவையை தொடங்கினார். அரசு மருத்துவரான பிறகும் சொந்த ஊர் மக்களுக்காக மருத்துவ சேவையைத்தொடர்ந்தார். சொந்த கிளினிக் வைத்திருந்தாலும் பணத்தை எதிர்பார்க்காமல் சிகிச்சைக்கு வரும் மக்களுக்கு தேவையானமருத்துவ ஆலோசனையும் மாத்திரை, மருந்துகளையும் பணத்தினைப் பெரிதாக எதிர்பாராமல் கொடுத்து அனுப்பினார்.
பிறகு பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணி செய்யும் போதும் மருத்துவர் பாஸ்கரனின் ஏழைகளுக்கான மருத்துவ சேவை தொடர்ந்தது. தனியாக கிளினிக் நடத்தும் போது தன்னை நம்பி பல கி.மீ கடந்து வரும் நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகளுடன் பயணச் செலவுக்கும் பணம் கொடுத்து அனுப்புவார்.
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணி செய்யும் போது தனது தனியார் கிளினிக்கை தேடி வரும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு தனியாரில் அறுவை சிகிச்சை செய்ய லட்சங்களில் செலவாகும் என்று கூறி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அறுவை சிகிச்சை செய்து செலவை மிச்சப்படுத்தி உயிரைக் காப்பாற்றி அனுப்பிவிடுவார். அப்படி பணம் செலவில்லாமல் சிகிச்சை பெற்ற பலரும் அவரை சந்தித்து தனியாக பழங்களுடன் பணம் வைத்து கொடுக்கும் போதுகோபமாகிவிடுவார். உங்களுக்கு பணம் விரயமாக வேண்டாம் என்று தான் அரசு மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்தேன். இப்பொழுது எனக்கே பணமா? இது என் சேவை; என்னை கேவலப்படுத்த வேண்டாம் என்று சொல்லும் போது பழம், பணத்தோடு வந்தவர்கள் கண்கலங்கி கைகளை குவித்து நன்றி சொல்வதை பலமுறை பார்த்திருக்கிறோம்.
அவரது கிளினிக்கிற்கு யார் சிகிச்சைக்கு போனாலும் ஊர்ல எல்லாரும் என்ன செய்றாங்க, எல்லாரும் நல்லா இருக்காங்களா? விவசாயம் எப்படி இருக்கு அம்மா நலமா அப்பா நலமா என்றெல்லாம் ஒரு உறவினர் போல விசாரித்துக் கொண்டே சிகிச்சை அளிப்பதோடு அவரது கனிவான பேச்சே நோய்களை குணமாக்கிவிடும். இப்படியே இவரால் குணமாக்கப்பட்டு உயிர்வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் இன்று கண்ணீர் வடிக்கிறார்கள்.
இப்படி பல சம்பவங்களைப் பகிர்ந்து கொள்ளும் பொதுமக்கள் இவர் டாக்டர் என்பதைவிட ஏழைகளின் கடவுள் என்றுதான் சொல்வோம். காசு பணம் இல்லைன்னாலும் உடல்நிலை சரியில்லை என்றால் நம்பிக்கையோட பாஸ்கரன் டாக்டர்கிட்ட போகலாம். இன்றைக்கு பலர் மருத்துவத்தை பணம் கொட்டும் துறையாக பார்க்கிறார்கள் ஆனால் பாஸ்கர் டாக்டர் கடைசி வரை உயிர்காக்கும் உன்னத சேவையாக பார்த்தார். அதனால் தான் இன்றைக்கு இத்தனை மக்களும் கண்ணீரோடு நிற்கிறார்கள் என்கின்றனர். மருத்துவர் பாஸ்கரனின் இழப்பு ஏழைகளுக்கான இழப்பு.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)