திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே அய்யம்பாளையம் மருதாநதி அணை இன்று காலை பாசனத்திற்காக தண்ணீர் திறப்பதாக இருந்தது. அதை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திறந்து வைப்பதாகவும் இருந்தது. ஆனால் அயோத்தி தீர்ப்பை ஒட்டி இன்று அனைத்து நிகழ்ச்சிகளையும் அமைச்சர் சீனிவாசன் ஒத்திவைத்தார்.
அப்படி இருக்கும் போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் திடீரென அணையில் தண்ணீரை திறக்க முடிவு செய்து அதிகாரிகள் விவசாயிகள் மற்றும் பத்திரிக்கையாகள் எல்லோரும் அணைக்கு சென்றனர். அங்கு வழக்கம் போல் அணை திறப்பதற்கு முன்பு நடைபெறும் சிறப்பு பூஜைகள் காண ஏற்பாடுகள் தொடங்கின. அப்போது ஊழியர் ஒருவர் சாம்பிராணி கொளுத்தினார், புகை கிளம்ப தொடங்கியதும் சற்று நேரத்தில் அணையின் மதகு பகுதியிலிருந்து மலைத் தேனீக்கள் திடீரென அணை மேற்பரப்பிற்கக்கு படை எடுத்தன.
அங்கு நின்று கொண்டிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊழியர்கள், விவசாயிகள் மற்றும் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் என அனைவரையும் கொட்டத் தொடங்கின. இதனால் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு சிதறி ஓடினர். இருப்பினும் தேனீக்கள் விடாமல் துரத்தின, அணை காவலாளி பாண்டி தேனீக்களிடம் வசமாக சிக்கிக்கொண்டார். தேனீக்கள் கடுமையாக தாக்கியதில் மயக்கமடைந்த அவர் சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மேலும் தேனீக்கள் கொட்டியதில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுந்தரப்பன், உதவி செயற்பொறியாளர் சௌந்தரம், உதவி பொறியாளர் மோகன்தாஸ் மற்றும் விவசாயிகள் செய்தியாளர்கள் உட்பட 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். "அணை திறப்பதற்கு முன்பே தேன்கூட்டை அதிகாரிகள் முறையாக கவனித்து இருந்தால் இந்த விபரீதம் ஏற்பட்டு இருக்காது" என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு 'தேனீக்கள் அப்புறப்படுத்தப்பட்ட பின்பு அணை திறக்கப்படும்' என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவித்தனர்.