beaten on a youth in a dispute over renting out a house

கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு அருகே அமைந்துள்ளது கருப்பம்பாளையம் ஊராட்சி. இங்குள்ள EB கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். 33 வயதான இவர், தான் வசிக்கும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கட்டட வேலைகளைச் செய்து வருகிறார். இவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், மணிகண்டனுக்கு சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டை பூபதி என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் சமரசமாக இருந்த இவர்களுக்குள் காலப் போக்கில் சிறுசிறு உரசல்கள் ஏற்பட்டு வந்துள்ளது. அதன் நீட்சியாக, இந்த வாடகை வீடு விவகாரத்தில் மணிகண்டனுக்கும் பூபதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

இத்தகைய சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்போது, அங்கு வந்த கருப்பம்பாளையம் திமுக ஊராட்சி மன்றத்தலைவரும்மேற்கு ஒன்றிய செயலாளருமான கன்னிமுத்து என்பவர், மணிகண்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில், திடீரென கோபமடைந்த கன்னிமுத்து, மணிகண்டனின் வாடகை வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை அவரே எடுத்துச் சென்றுள்ளார்.

Advertisment

இதனிடையே, அதைக் கேட்ட மணிகண்டனை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து, உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது கன்னிமுத்து அங்கு இல்லை. அதன்பிறகு, அவரை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசியபோது, தன்னுடைய தோட்டத்திற்கு வா... என கன்னிமுத்து கூறியுள்ளார்.

இந்நிலையில், மணிகண்டன் அவருடைய தோட்டத்து வீட்டிற்கும் சென்றுள்ளார். அப்போதுமது போதையில் இருந்த கன்னிமுத்து, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மணிகண்டனை அவரது வீட்டு அறையில் அடைத்து வைத்து கைகளைக் கட்டிப் போட்டு கட்டையால் சரமாரியாகத்தாக்கியுள்ளார். மேலும், இதில் பலத்த காயமடைந்த மணிகண்டனை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், மணிகண்டனை தாக்கிய கன்னிமுத்து மீது ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், அந்தப் புகாரை எடுத்துக்கொண்ட போலீசார் கன்னிமுத்து மீது பி.சி.ஆர் வழக்கு பதிந்துள்ளனர். இதற்கிடையில்,இச்சம்பவம் குறித்து வால்பாறை சட்டமன்ற உறுப்பினரான அமுல் கந்தசாமியிடம் முறையிட்டனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் ஏராளமானோர் சேர்ந்து ஆனைமலை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது, அங்கிருந்த போலீசாரிடம் குற்றம்சாட்டப்பட்டகன்னிமுத்துவை ஏன் கைது செய்யவில்லை என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மேலும், அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர். அதன்பிறகு, அங்கிருந்த பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய குறைகளை போலீசாரிடம் தெரிவித்தனர். இதனைக் கேட்டுக்கொண்ட போலீசாரும் இச்சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். பின்னர், அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். தற்போது, பொள்ளாச்சியில் பட்டியலின இளைஞர் ஒருவரைக் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.