Skip to main content

குழந்தை கடத்த முயன்றதாக வடமாநில இளைஞர் மீது சரமாரி தாக்குதல்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
barrage beaten on a youth in the north state for trying to kidnap a child

வேலூர் ஓல்டு டவுன் பகுதியில் நேற்று மாலை (05.03.2024) அப்பகுதியில் சுற்றித் திரிந்த அடையாளம் தெரியாத வடமாநில வாலிபரை, குழந்தை கடத்த வந்தவர் என நினைத்த பொதுமக்கள் சரமாரியாகத் தாக்கி வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும், இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க எஸ்.பி. மணிவண்ணன் வேலூர் டிஎஸ்பி உத்தரவிட்டுள்ளார். பின்னர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் குமார் தீவிர விசாரணை நடத்தியுள்ளார்.

விசாரணையில், அந்த நபர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஜில்லுதா கோஸ் என்பதும் சற்று மனநலம் பாதித்தவர் என்பதும், வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவமனைக்கு குடும்பத்தோடு சிகிச்சைக்காக வந்ததும் தெரிந்தது. இதையடுத்து மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஜில்லுதா கோஸ் குழந்தை கடத்த வந்தவன் எனக்கூறி தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 

இது முற்றிலும் உண்மைக்குப் புறமான தகவல். இத்தகைய தகவல்களைப் பகிர்வதோ, பதிவிடுவதோ சட்டப்படி குற்றம். மேலும் ஆதாரமற்ற உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பதிவிடுபவர் மற்றும் பகிர்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் எச்சரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

“இப்படி இருந்தா எப்படி ஓட்டுக்கேட்க முடியும்?” - கவுன்சிலரை லெஃப்ட் ரைட் வாங்கிய எம்.எல்.ஏ

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
MLA advised the councillors to do the panchayat work properly

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகொண்ட அடுத்த வெட்டுவானம் பகுதியில் எம்.எல்.ஏ நந்தகுமார் இன்று (18.7.2024) திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அனைவருக்கும் குடிநீர் வழங்கும் அம்ரித் திட்டப் பணிகளில் தோண்டப்பட்ட குழிகளில் சரியான முறையில் ஒப்பந்ததாரர் சிமெண்ட் பேட்ச் ஒர்க் சரிவரச் செய்யாததால் பள்ளமாக இருந்தது.

உடனடியாக இதை அனைத்தையும் கொத்தி எடுத்து விட்டு மீண்டும் சிமெண்ட் சாலை தரமான முறையில் அமைக்க வேண்டும் எனவும் டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்குள் பணிகளை ஒழுங்காகச் செய்யவில்லை என்றால் மக்களிடம் ஓட்டு கேட்க முடியாது எனக் கவுன்சிலர்களைக் கடிந்து கொண்டார்.

தொடர்ந்து வெட்டுவானம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சுமார் 43 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ள மேம்பாலம் அமைக்கும் பணியினை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் தரவேண்டும் என அதிகாரிகள் இடத்தில் அறிவுரை வழங்கினார்.

Next Story

காவல் ஆய்வாளர் மீது தொடர் புகார்; பாய்ந்த அதிரடி நடவடிக்கை!

Published on 16/07/2024 | Edited on 16/07/2024
Transferred to  armed forces after   complaints against the police inspector

சென்னையைச் சேர்ந்த ராஜா என்பவர் வேலூர் மாவட்ட காவல்துறையில் சத்துவாச்சாரி காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் ஆய்வாளர் ராஜா சத்துவாச்சாரி காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கவரும் பொதுமக்களின் புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், புகார் கொடுக்க வருபவர்களையே தகாத வார்த்தைகளில் திட்டுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சத்துவாச்சாரி காவல் நிலையத்திற்கு உட்பட்டப் பகுதியில் அதிக குற்றச்செயல்கள் நடப்பதாகவும், அதே பகுதியில் பாலியல் தொழில் நடப்பது தெரிந்தும் ராஜா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் குற்றச்சாட்டுகள் உண்மை என்று தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் ராஜாவை உயர் அதிகாரிகள் இரண்டு மூன்று முறை அழைத்து எச்சரிக்கை செய்துள்ளனர். ஆனாலும் காவல் ஆய்வாளர் ராஜா தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் காவல் ஆய்வாளர் ராஜாவை வேலூர் ஆயுதப்படைக்கு பணியிடை மாற்றம் செய்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது வேலூர் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.