Skip to main content

வீட்டிற்குள் உறங்கிய பச்சிளம் குழந்தை; தண்ணீர் தொட்டியில் சடலமாகக் கிடந்த கொடூரம்

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
 baby sleeping inside the house was found in a water tank

புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி காவல் சரகம் கரையப்பட்டி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த குட்டியப்பன் - வீராயி தம்பதியின் மகன் மோகன் (வயது 34) பல வருடங்கள் வெளிநாட்டில் வேலை செய்து சம்பாதித்து வந்தவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு நம்பூரணிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்து சில மாதங்களிலேயே கருத்துவேறுபாடு ஏற்பட்டு கர்ப்பிணியாக இருந்த பெண் அவரது தாயார் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

முதல் திருமண வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஒரு வருடத்திற்கு முன்பு உறவினர்கள் சம்மதத்துடன் வைரிவயல் கிராமத்தைச் சேர்ந்த செண்பகவள்ளி (எ) கிருத்திகாவை முறைப்படி தாலி கட்டாமல் தன் வீட்டிற்கு அழைத்து வந்து கணவன் மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 35 நாட்களுக்கு முன்பு ஆண்குழந்தை பிறந்துள்ளது.

வெள்ளிக் கிழமை மதியம் குட்டியப்பன் - வீராயி இருவரும் அவர்களின் மகளுக்கு பொங்கல் சீர் கொடுக்க சென்றுவிட்டனர். அப்போது மோகன், செண்பகவள்ளி இவர்களின் 35 நாள் பச்சிளங்குழந்தை மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர். மாலை 4 மணிக்கு செண்பகவள்ளி குழந்தையை கட்டிலில் படுக்கப் போட்டுவிட்டு வீட்டிற்குள் உள்ள குளியல் அறைக்குச் சென்று குளிக்கச் சென்றுவிட்டார். மோகன் மற்றொரு அறையில் தூங்கியுள்ளார்.

 baby sleeping inside the house was found in a water tank

செண்பகவள்ளி குளித்துவிட்டு வெளியே வந்து பார்த்த போது குழந்தையை காணவில்லை. பதறிக் கொண்டு மோகனை எழுப்பி குழந்தையை காணவில்லை என்று கூறியுள்ளார். இருவரும் குழந்தையை தேடும் போது குழந்தைக்கு உடுத்தி இருந்த துணிகள் வீடு ஓரம் கிடந்துள்ளது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும் சேர்ந்து தேடினார்கள். சிறிது நேரத்தில் மொட்டைமாடியில் மூடியிருந்த தண்ணீர்த் தொட்டியை திறந்த மோகன் குழந்தை இதுக்குள்ள கிடக்கு என்று தூக்கியுள்ளார். பேச்சுமூச்சின்றி கிடந்த குழந்தையை அருகில் உள்ள ஒரு மருத்துவரிடம் காட்ட குழந்தை உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார்.

35 நாள் பச்சிளம் ஆண் குழந்தை தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட தகவல் காட்டுத்தீயாக பரவிய நிலையில் ஊரே கூடிவிட்டது. கே.புதுப்பட்டி போலீசாரும் வந்து குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

பிறந்து 35 நாட்களேயான பச்சிளங் குழந்தை எப்படி மாடிக்கு போனது? யார் தூக்கிச் சென்றது? வீட்டிற்குள் இருவர் இருக்கும் போது யார் உள்ளே நுழைந்து குழந்தையை தூக்கி இருப்பார்கள்? நாய் தூக்கிச் சென்றிருந்தால் கடித்து வெளியில் தான் வீசி இருக்கும்.. மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் குழந்தையை போட்டுவிட்டு தொட்டியை மூடிய கொடூர கொலைகாரன் யார்? சிறிது நேரத்திலேயே தண்ணீர் தொட்டியை திறந்து பார்க்கும் எண்ணம் எப்படி உருவானது என்பது போன்ற பல கேள்விகளுடன் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். யார் குற்றவாளி என்பதை விரைவில் ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம் என போலீசார் கூறினர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் சம்பந்தமாக அதிரடி சோதனை

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
raid in Kalvarayan hill related to illicit liquor

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராய சம்பவத்தில் 67 பேர் உயிர் இழந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தின் பிறப்பிடம் எனக் கூறப்படும் கல்வராயன் மலையில் ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் ஐ.ஜி அஸ்ராகார்க் கள்ளக்குறிச்சி எஸ்பி ரஜத் சதுர்வேதி ஆகியோர் 200 க்கும் மேற்பட்ட போலீசாருடன் கல்வராயன் மலையில் அதிரடியாக கள்ளச்சாராய சோதனையில் ஈடுபட்டனர். 

இந்தச் சோதனையின் போது ஏற்கனவே கள்ளச்சாராய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் பெயர் பட்டியலை வைத்துக் கொண்டு அவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்கள் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்களா? கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கான மூலப் பொருட்கள் அவர்களுடைய வீட்டில் இருக்கிறதா என்ற சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அடர்ந்த வனப்பகுதி உள்ள இடங்களில் ட்ரோன் கேமராக்களை பறக்கவிட்டு சோதனைகளை செய்துள்ளனர். கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சும்பணி ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், காவல்துறை அதிகாரிகளின் இன்றைய சோதனையில் எதுவும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேற்கொண்டு கல்வராயன் மலையில் மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சும் சம்பவம் தொடர்ந்து விடக்கூடாது எனக் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

சின்னசேலம் பகுதி வழியாக கல்வராயன் மலை கரியாலூர் வெள்ளிமலை போன்ற பகுதிகளுக்கு சென்ற இவர்கள் அதனைத் தொடர்ந்து அங்கிருந்து சேராப்பட்டு என்ற மலைப் பகுதிக்கு சென்று அந்தப் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்ட பின்னர். சோதனை முடிந்த பிறகு மலையிலிருந்து கீழே இறங்கி சங்கராபுரம் வட்டம் வழியாக வெளியேறிச் சென்றுள்ளனர்.

Next Story

மதுரையை உலுக்கிய சம்பவம்; ஐ.ஏ.எஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி தற்கொலை!

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
Ex-wife of IAS officer lost their life in case of child abduction

மதுரையைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார் - மைதிலி தம்பதியினர். இவர்களது மகன் மதுரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். அவர், பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 11 ஆம் தேதி பள்ளிக்கு ஆட்டோவில் சென்றுக்கொண்டிருந்த போது சிறுவன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் பால்பாண்டி இருவரையும் மர்ம கும்பல் ஒன்று ஆயுதங்கள் கொண்டு தாக்கி கடத்தி சென்றது. 

இதனையடுத்து அந்தக் கும்பலை சேர்ந்தவர்கள் ராஜ்குமார் மைதிலி தம்பதியினரை தொடர்புக்கொண்டு, ரூ.2 கோடி பணம் கொடுத்தால் உன் மகனை உயிருடன் ஒப்படைப்பதாக மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மைதிலி உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவன் மற்றும் ஆட்டோ ஓட்டுநரையும் பத்திரமாக மீட்டனர். மேலும் சிறுவனை கடத்தியது தொடர்பாக முன்னாள் காவலர் செந்தில் குமார் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். செந்தில் குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் அவர் உயர் அதிகாரிகளால் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

செந்தில் குமார் போலீசாரிடம் அளித்த தகவலின்படி தென்காசியைச் சேர்ந்த வீரமணி, காளிராஜ், நெல்லையைச் சேர்ந்த அப்துல் காதர் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில், சிறுவன் கடத்தப்பட்டதில் தூத்துகுடியைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி சூர்யா மற்றும் பிரபல ரௌடி மகாராஜா ஆகிய இரண்டு பேருக்கும் தொடர்பு இருப்பதைக் கண்டுப்பிடித்தனர். 

இதனைத் தொடர்ந்து வழக்கின் முக்கிய குற்றவாளியான சூர்யா மற்றும் மகாராஜா இருவரையும் பிடிக்க 4 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் குஜராத்தில் தங்கிருந்த சூர்யா தற்கொலை செய்துக்கொண்டதாக  தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து சூர்யாவின் தாய் தனது மகள் குஜராத்தில் தற்கொலை செய்துகொண்டதை உறுதி செய்யுமாறும், மேலும் தனது மகளை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனிடையே, தலைமறைவாக உள்ள ரௌடி மகாராஜா பிடிபடாத நிலையில் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மதுரையை உலுக்கிய இந்தச் சமபவத்தில் முக்கிய குற்றவாளி சூர்யா தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.