கைது செய்யப்பட்ட சுரேஷ், நரேஷ், அஜித்குமார் (மேலிருந்து கீழே)
சென்னை அயனாவரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிலையில் இந்த சம்பவத்தில் பல்வேறு அடுக்கடுக்கான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் 40 சதவீதம் மனவளர்ச்சி குன்றிய நிலையில் அதற்கான சான்றிதழை வைத்து கல்லூரி ஒன்றில் சேர்ந்து மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். அந்த மாணவி தினமும் காலை ஆட்டோவில் கல்லூரிக்கு சென்று விட்டு பிற்பகல் 1.30 மணிக்கு வீட்டிற்கு வருவது வாடிக்கை. ஆனால் கடந்த நான்காம் தேதி கல்லூரி மாணவி தினமும் வரும் ஆட்டோவில் வரவில்லை. இதனால் பெற்றோர்கள் பல இடங்களில் தேடினர். ஆனால் தாமதமாக தனியாக மாணவி வந்துள்ளார்.
உடனே மாணவியிடம் அவருடைய தந்தை தாமதமாக வந்ததற்கான காரணம் குறித்து விசாரித்தார். அப்பொழுது மாணவி தெரிவித்த தகவல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. தன்னுடன் படிக்கும் சந்தியா என்ற தோழி நரேஷ், மணி, கார்த்திக், சுரேஷ் ஆகிய நான்கு பேரிடமும் தன்னை அறிமுகப்படுத்தியதாகவும் தொடர்ந்து அவர்கள் நான்கு பேரையும் நேரில் சந்திக்க வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். சந்திப்பின் மூலம் மொபைல் எண்ணை பெற்றுக்கொண்ட அந்த நபர்கள் தன்னிடம் குறுஞ்செய்தி வாயிலாக பேசி வந்தனர். இந்நிலையில் கடந்த நான்காம் தேதி சுரேஷ் தன்னை காதலிப்பதாகவும் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். அதனைக் கேட்டுச் சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை சுரேஷ் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு மீண்டும் கல்லூரி வாசலிலேயே விட்டுள்ளார்.
மகள் தெரிவித்த இந்த தகவலைக் கேட்டு அதிர்ந்த தந்தை உடனடியாக அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பின்னர் மாணவியின் செல்போனை தந்தை ஆய்வு செய்த பொழுது சுரேஷ் என்ற நபர் மட்டுமல்லாது பல்வேறு நபர்கள் மாணவிக்கு ஆபாசமாக குறுஞ்செய்திகள் அனுப்பி இருந்ததைப் பார்த்த தந்தை மேலும் அதிர்ச்சி அடைந்தார். இதில் மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சுரேஷ் மட்டுமல்லாது கார்த்திக், ரோஷன், கவி, நரேஷ் ஆகியோர் மனநலம் பாதிக்கப்பட்டதை சாதகமாக்கிக் கொண்டு அடிக்கடி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு கல்லூரி வாசலில் இறக்கி விடுவதை வாடிக்கையாக செய்து வந்தது தெரியவந்தது.
இந்த வழக்கு எழும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து சுரேஷ், கார்த்திக் என்கிற சபரீசன், மணி, நரேஷ், சுப்ரமணி மற்றும் அஜித்குமார் என இதுவரை ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இவர்களை அறிமுகப்படுத்திய சந்தியா என்ற பெண் தோழி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவாக இருக்கும் நிலையில் அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட சுரேஷ் என்ற நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்ட அந்த மாணவிக்கு சாக்லேட் மிகவும் பிடிக்கும் என்பதை தெரிந்து கொண்டு அவருக்கு விலை உயர்ந்த சாக்லேட்களை வாங்கி கொடுத்து, ஆபாசப் படங்களை காட்டி அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கொடூரம் தெரியவந்துள்ளது. அதேபோல் தன்னுடைய நண்பர்களுடனும் மாணவியை பேசவைத்து அவர்களிடமும் நெருக்கத்தை ஏற்படுத்த சுரேஷ் உதவியதும் தெரியவந்துள்ளது.