இலங்கை அகதி
தொலைக்காட்சிகளில் அட்டிகா அடகு நகைக்கடை தொடர்பான விளம்பரங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டே இருக்கிறது. அந்த விளம்பரத்தில் குறிப்பாக அன்றைய மார்கெட் விலைக்கே அடகு வைக்கும் நகைகளுக்கு பணம் கொடுப்போம் என்கிற ஆசையை தூண்டும் விதமாக விளம்பரங்களை பார்த்து திருடிய நகைகளை அட்டிகா கடைகளில் கொடுத்து பணமாக்கியதால் தற்போது அந்த நகைக்கடை அதிபர் மீது வழக்கு பாய்ந்திருக்கிறது.
நக்கீரன் இணையத்தில் கடந்த 20.07.2018 100 பவுன் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி! திருட்டு நகைகளை வாங்கிய பிரபல அடகுகடைகாரர் தலைமறைவு! என்கிற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டு இருந்தோம். இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கையாக நாமக்கலை சேர்ந்த அட்டிகா நகைக்கடை அதிபர் மீது வழக்கு பதிவு செய்தும் அவர்களின் தமிழக கிளை பொறுப்பாளர்கள் இரண்டு பேரை கைது செய்திருக்கிறார்கள் திருவரம்பூர் போலிசார்.
திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள துவாக்குடி அடுத்த வாழவந்தான்கோட்டையில் இலங்கை அகதிகள் முகமாமை சேர்ந்தவர் தேவகுமாரி. இவர் அகதிகள் முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு வட்டி தொழில் செய்து வருகிறார். இவர், கடந்த 4-ந் தேதி அப்பகுதியில் இரவில் நடந்து சென்றபோது டூவிலரில் வந்த 3 பேர், தேவகுமாரி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த 10 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றனர்.
அப்போது முகாமை சேர்ந்த பொதுமக்கள், தேவகுமாரியிடம் நகைகளை பறித்த சிவகுரு, விக்னேஷ் வரன் ஆகிய 2 பேரை மடக்கி பிடித்து துவாக்குடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். நாமக்கல் மேட்டுப்பட்டி அகதிகள் முகாமை சேர்ந்த ராஜன் என்கிற கெட்டியான்பாண்டி மட்டும் பொதுமக்கள் பிடியில் இருந்து தப்பி சென்றார். திருச்சி என்.ஐ.டி. அருகே மறைந்திருந்த அவரை துவாக்குடி போலீசார் பிடித்தனர்.
அவரிடம், போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
திருச்சி மற்றும் நாமக்கல்லில் 100 பவுனுக்கும் மேல் நகைகளை கொள்ளையடித்ததும், அந்த நகைகளை மனைவியிடம் கொடுத்து அனுப்பி நாமக்கல்லில் உள்ள அட்டிகா என்ற நகைக்கடையில் நகைகளை விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து கெட்டியான்பாண்டி மற்றும் அவருடைய மனைவி அனு ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் திருடிய நகைகளை அட்டிகா அடகு கடையில் வைத்து பணம் வாங்கிய ரசீதுகளை கைப்பற்றி நகைகடையில் நகைளை மீட்பதற்காக சென்ற போது அட்டிகா நகைக்கடையில் பணியாளர்கள் நகைகளை கொடுக்க முடியாது என்று மறுத்திருக்கிறார்கள். இந்த நிலையில் தனிப்படை இன்ஸ்பெக்டர் மதன் திருட்டு நகைகளை வாங்கிய உங்களை விசாரிக்க வேண்டும் என்று நகைக்கடை மேலாளரும், நகை மதிப்பீட்டாளருமான தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த முருகேசன் சேல்ஸ் பொறுப்பாளர் சேலம் மாவட்டம் மேட்டூர் செட்டிகாட்டுப்பட்டியை சேர்ந்த சக்திவேல் ஆகிய 2 பேரையும் விசாரணைக்கு அழைத்து வந்து திருட்டு நகைகளை வாங்கிய குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்து திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு சம்பந்தமாக நகைக்கடை உரிமையாளர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பாபு மற்றும் தமிழக பிரதிநிதி ஸ்ரீகாந்த் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறோம் என்றார் தனிப்படை இன்ஸ்பெக்டர் மதன். இதற்கு இடையில் இன்ஸ்பெக்டர் மதன் மீது நடைக்கடை மீது அவதூறு பரப்பியதாக நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள்.