Skip to main content

ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு மு.க.ஸ்டாலின், ராமதாஸ், திருநாவுக்கரசர் இரங்கல்   

Published on 27/05/2020 | Edited on 27/05/2020

 

Arumugam Thondaman


இலங்கையின் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி துறை மந்திரியும், தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார். ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ''ஆறுமுகன் தொண்டமான் மறைவு தாங்க முடியாத துயரத்தையும் அதிர்ச்சியையும் தந்ததாகவும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும்'' ஸ்டாலின் கூறி உள்ளார்.
 


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''இலங்கை காங்கிரஸ் தலைவரும், இலங்கை கால்நடை மற்றும் ஊரக சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் மாரடைப்பால் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
 

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரசவழி வந்த குடும்பத்தைச் சேர்ந்தவரும், இலங்கையில் மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த சவுமியமூர்த்தி தொண்டமானின் பெயரருமான ஆறுமுகம் தொண்டமான் மலையகத் தமிழர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர்.  மலையகத் தமிழர்களின் நலனுக்கான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற இந்திய அரசை வலியுறுத்தி குரல் கொடுக்கும்படி பலமுறை பாட்டாளி மக்கள் கட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
 

55 வயதான ஆறுமுகம் தொண்டைமான் இலங்கை அரசியலில் பல புதிய உச்சங்களைத் தொடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இளம் வயதிலேயே அவர் மறைந்தது மலையகத் தமிழர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தொண்டர்களுக்கு  இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.
 


திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''இலங்கை அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஆறுமுகன் தொண்டைமான் அவர்கள் அகால மரணம் அடைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன். இளம் வயதிலேயே அமைச்சராகி, இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்காகப் பணியாற்றியவர். தமிழகத்தில்  ஏராளமான உறவினர்களையும், நண்பர்களையும் கொண்டவர். பழகுவதற்கு இனிமையான பண்பான சகோதரர். இளம் வயதிலேயே அவர் இயற்கை எய்தியிருப்பது மேலும் மன வருத்தம் தருகிறது. அன்னாரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''இலங்கை தமிழ் அமைச்சரும், இலங்கை காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஆறுமுகம் தொண்டமான் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
 

தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட ஆறுமுகம் தொண்டமான் இலங்கையில் மலையகத் தமிழர்களின் முகமாக திகழ்ந்தவர். மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்காக போராடியவரும், மலையகத் தமிழர்களின் தந்தை என்று போற்றப்படுபவருமான சவுமிய மூர்த்தியின் பெயரனான ஆறுமுகம் தொண்டமான் இலங்கை அரசுக்கும், தமிழக அரசுக்கும் பாலமாக திகழ்ந்தவர். தமிழர்களின் கலை & கலாச்சாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்; குரல் கொடுத்தவர்.
 

ஏற்காடு மாண்ட்ஃபோர்டு பள்ளியில் எனக்கு சில ஆண்டுகள் மூத்த மாணவரும், எனது நண்பரும் ஆவார்.  ஆறுமுகம் தொண்டமானின் மறைவு இலங்கை மலையகத் தமிழர்களுக்கு பெரும் இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என கூறியுள்ளார். 


 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தோட்டத் தொழிற்சங்கத் தலைவரும் அத்தோட்டத்துறைக்கான அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் நேற்று (மே 26' 2020) காலமானார் என்பதையறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
 

மலையகமக்களின் நலன்களுக்காக கடந்த 30- ஆண்டுகளாகப் பணியாற்றியவர். 25-ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் பொறுப்பேற்று சிறப்புற செயல்பட்டவர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிறுவனர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் குடும்பவழி வாரிசாக மட்டுமின்றி, அவருக்குப் பின்னர் காங்கிரசின் தலைவராகப் பொறுப்பேற்று அரசியல் வாரிசாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர்.
சிங்களத் தலைவர்களோடு அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் மலையமக்களின் நலன்களுக்காக அவர்களுடன்  இணக்கமான நட்பைக் கொண்டிருந்தார்.
 

2010 ஆம் ஆண்டு இலங்கைக்குச் சென்றிருந்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை மலையகத்திற்கும் அழைத்துச்சென்று தோட்டத் தொழிலாளர்களைச் சந்திக்க ஏற்பாடுகளைச் செய்தார்.

தனிப்பட்டமுறையில், அவரும் அவரது உறவினர்- மாகாண அமைச்சர் செந்தில்தொண்டமான் அவர்களும் என்மீது மாறாத பற்றுக்கொண்டவர்கள் என்கிற நிலையில், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் திடுமென உயிரிழந்தார் என்பது ஏற்கவியலாத துயரமாக உள்ளது. 
 

அவரது மறைவு அவரது கட்சிக்கும் மலையக மக்களுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்துவாடுகிற அவரது குடும்பத்தினருக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்'' என கூறியுள்ளார். 

 




 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Tamil Nadu fishermen incident for Sri Lanka Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் விடுவிப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Tamil Nadu fishermen released from Sri Lankan jail

தமிழக மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய சூழலில் மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 19 மீனவர்கள் கடந்த மார்ச் 6 ஆம் தேதி (6.03.2024) மீன் பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர். இவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும், மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி கைது செய்தனர். அதோடு மீனவர்கள் பயன்படுத்திய 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதே சமயம் மீனவர்கள் 19 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மயிலாடுதுறையைச் சேர்ந்த 9 பேர், புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 பேர், புதுச்சேரி, காரைக்காலில் இருந்து 6 பேர் என மொத்தம் 19 மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அப்போது மீனவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்று, அரசின் சார்பில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.